Saturday, May 8, 2010

காதலை கொச்சைப்படுத்தாதீர்கள் . . .

                 தமிழகத்தின் கலாசாரச் சீர்கேட்டிற்கு மற்றுமொரு உதாரணம். தினமணி நாளிதழில் தலையங்கமாய் வந்துள்ளது. திறம்பட எடுத்து இயம்பியதற்காய் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள். தினமணியின் கட்டுரையை அவர்களது நடையிலேயே தந்துள்ளேன்.


        தமிழக உள்துறை அமைச்சகம் சார்பில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கும் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள சில தகவல்கள் தமிழகத்தையே வெட்கப்பட வைப்பன. ஏழைகளுக்கு இலவச நிலம், வறிய குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி என்று ஆயிரம் நல திட்டங்களை அமல் செய்தாலும் தமிழகம் போகும் பாதை சரியில்லை என்பதையே உள்துறை அமைச்சகத்தின் குறிப்புகள் உணர்த்துகின்றன.
        தனிநபர் வருமானத்திலும், கல்வியிலும், சுகாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு என்னதான் முன்னிலை வகித்தாலும் ஒழுக்கக் குறைவான சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றால் நாம் எப்படி தலைகுனியாமல்  இருக்க முடியும்
                 2007 முதல், காதல் விவகாரத்தால் நடைபெறும் கொலைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதுதான் அது. 2007-ல் 123 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2009-ல் 217 ஆக அதிகரித்துள்ளது.
                 கடந்த ஓராண்டில் மட்டும் 1,600 கொலைகள் நடந்துள்ளன. குடும்பச் சண்டைகளால் 453 கொலைகளும், அற்பச் சண்டைகளால் 372 கொலைகளும் நடந்துள்ளன.2007-ல் 1,521 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2009-ல் 1,644 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ஜாதிச் சண்டைகளில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
                        இதில் மிகவும் கவலை தரத்தக்கது எதுவென்றால் காதல் தொடர்பான கொலைகள் அதிகரித்து வருவதுதான். இந்தக் கொலைகள் அதிகரித்ததற்கு என்ன காரணம் என்று கேட்டால், தமிழக முதல்வர் பாணியில் காதல்தான் காரணம் என்று கூறிவிடலாம். இந்தக் காதலில் முறையான முதல் காதல், ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், கள்ளக் காதல் என்று வகைகள் பல இருக்கலாம். களவியல் என்பது தமிழருக்குப் புதியதல்லவே என்று இலக்கிய நயத்தோடு இதை புறந்தள்ளிவிட நினைக்கலாம். தமிழர்களின் தனிச்சிறப்பே காதலும் வீரமும்தான் என்பதை ஒப்புக் கொண்டாலும், தமிழனுக்கு மானமும் முக்கியம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
                   இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி அறிவு நன்றாக வளர்ந்திருக்கிறது. பட்ட வகுப்புகளிலும் முதுகலை பட்ட வகுப்புகளிலும், தொழில் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அப்படி படிக்கிறவர்களும் படித்தவர்களும் காதல் வயப்படுகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தக் காதல்களுக்குப் பெரிதும் துணை புரிவது செல்போன் என்று அழைக்கப்படும் அலை பேசிகள். இதனால் வீட்டுக்குத் தெரியாமல், உறவுக்குத் தெரியாமல் சந்திக்கவும் வரம்பு மீறவும் நேர்கிறது.பருவ வயதில் இதெல்லாம் வழக்கம்தான், இதைப் போய் பெரிய விஷயமாக எடுத்துப் பேசுவதும் அறிவுரை கூற முயல்வதும் வீண் வேலை என்றே பலரும் கருதுகின்றனர். இந்தச் சமுதாயத்தில் ஒரு விஷவித்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டு வருகிறது, அதை இப்போதே அடையாளம் கண்டு தடுக்காவிட்டால் பிரச்னை பெரிதாகி பிறகு வெளியில் பேசக்கூட முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும் என்று எச்சரிப்பது நம் கடமை.    
                     பள்ளி, கல்லூரி வாசல்களிலும் வீதியோரங்களிலும் காபிக் கடைகளிலும் திரையரங்குகளிலும் பூங்காக்களிலும் யாருமே வர நினைக்காத இடங்களிலும் வர முடியாத வேளைகளிலும் ஜோடி ஜோடியாக சுற்றுவதைப் பார்த்து, காதலர் பூமியான பிரான்ஸô தமிழ்நாடும் மாறி வருகிறது என்று சமுதாய பொறுப்பே இல்லாத சிலர் வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம், பொறுப்புள்ள யாரும் மெü சாட்சியாக இருக்க முடியாது.
                  இப்போது பிரச்னை முற்றி கொலைகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. கொலை நடந்த குடும்பங்களைச் சற்று நினைத்துப் பார்த்தால் இதயம் வலிக்கிறது. மலரினும் மெல்லிதான விஷயம் வன்மையானதாக மாறியதற்குக் காரணம் எது? எல்லோரும் வரவேற்கிறார்போல இது இலக்கியக் காதல் அல்ல என்பதுதான் காரணம்.  
                பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலியல் கல்வியைக் கற்றுத்தருவதற்குப் பதிலாக அவரவர்க்குள்ள சமூகப் பொறுப்பை உணர்த்துவதை முதல் வேலையாக அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.
               பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்காக அனுப்பப்படும் மாணவர்களுக்கு படிப்புதான் லட்சியமாக இருக்க வேண்டும், மற்றதெல்லாம் அவர்களுடைய ஆற்றலை, அறிவை, நேரத்தைப் பாழாக்கும் வெற்று கவனச் சிதறல்கள் என்று உணர்த்தப்பட வேண்டும்.  
                 பெற்றோருக்குத் தெரியாமல் காதலிப்பதும் வீட்டைவிட்டு ஓடிப்போவதும் நண்பர்கள் மற்றும் போலீஸ் துணையுடன் திருமணம் செய்து கொள்வதும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.    
                 முதலில் தன்னை வாழ்க்கைக்கு தகுதியானவனாக மாற்றிக்கொண்ட பிறகு, தனக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்வதை வரவேற்கும் அதே நேரத்தில், கணநேர இன்பத்திற்காக வாழ்க்கையைப் பாழாக்கும் பொருந்தாத காதலை எப்படி ஏற்பது? பல ஆடவர்கள் காதல் என்கிற விளையாட்டில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்கள் காதலித்த பெண்களையும் கண்ணீரில் மூழ்கடிக்கும் அவலம் ஒரு ஆரோக்கியமான அறிகுறி அல்லவே.
                 பண்பாடற்ற காதலை வளர்க்கும் வானொலிகளுக்கு, பண்பலை என்று பொருத்தமில்லாத பெயர். வணிக நோக்கம் மட்டுமே கொண்ட இத்தகைய பொழுது போக்குச் சாதனங்களும் இளைய சமுதாயத்தைத் தவறாக வழிநடத்தும்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தலையிட்டு நிலைமையைத் திருத்துவது அவசியம். ஆனால் தனியார்மயம் என்கிற பெயரில் அரசே இதுபோன்ற ஒழுக்கக்கேடுகளுக்குத் துணைபோகும் அவலத்தை என்னவென்பது?
                 புள்ளிராஜா பற்றிய விளம்பரம் ஆவலைத் தூண்டி, பிறகு பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களையும் அதைப்பற்றி பேசவைத்தபோது, பள்ளி ராஜாக்களின் மீது அக்கறை செலுத்தி இத்தகைய விளம்பரங்களை வரம்போடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இன்றைய முதல்வர் மு. கருணாநிதி எச்சரித்ததை நினைவுகூர்கிறோம்.
                   தமிழர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்கள், ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள் என்பதுதான் உலக அரங்கில் நமக்குப் பெருமைகள்ளக்காதலுக்குப் பெயர்போன தேசமாக, காதல் கொலைகளில் சிறந்த நாடாக இருப்பது பெருமையாக தோன்றவில்லை

                    அவசரக் காதலுக்கும், சந்தர்ப்பவாதக் காதலுக்கும், பொருந்தாக்காதலுக்கும் சங்க இலக்கியங்களை உதாரணம் காட்டி இழிவு படுத்தாதீர்கள்...
 

No comments:

Post a Comment