Thursday, November 25, 2010

நில மோசடி----அரசியல்வாதிகள்

                     கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற சொற்றொடர் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது நன்றாகவே பொருந்தும். மும்பையில் ஆதர்ஷ் வீடுகள் தொடர்பாக முழுவீச்சில் களத்தில் இறங்கி, அந்த மாநில முதல்வர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கிய பா.ஜ.க.வினருக்கு, தற்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் இதே சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது, மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.மும்பையில் எத்தகைய முறைகேடு நடைபெற்றதோ அதற்கு இணையான, அதைவிடவும் மிகவும் மோசமான முறைகேடுகள் கர்நாடகத்திலும் நடைபெற்று இருக்கின்றன.                                                                       

                      முதல்வர் பதவியில் இருப்பவர் தனது அதிகாரத்தைத் தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதை மீறுவது பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றம். ஆனாலும் அதிகாரம் கண்களை மறைக்கிறது. குடும்பத்தை மட்டுமே முன்நிறுத்துகிறது. இதற்கு எந்த மாநிலமும், எந்த முதல்வரும், ஏன், அரசியலில் இருக்கும் பெரும்பான்மையான தலைவர்கள் பலரும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

                      எடியூரப்பா, அவரது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் "ஜி' பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் தன் மகன், மகள் உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த முறைகேட்டில் தான் தப்பிக்க முடியாது என்கிற நிலையில், தன் மகள், மகன் மற்றும் உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார் எடியூரப்பா.

                   திருடியதைக் கொடுத்து விடுகிறேன் என்றால், திருடன் அல்ல என்றாகிவிடுமா, என்ன? இப்போது இன்னும் வேகமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர் மீது மட்டுமல்ல, எடியூரப்பாவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜே மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்தன. வீட்டுவசதித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் (மாநகராட்சிக் கவுன்சிலர்) கட்டா ஜகதீஷ் மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயில் தொடங்கி குமாரசாமி வரை இருக்கிறது. எடியூரப்பாவின் நிலமோசடி ஊழல் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் தற்போது பா.ஜ.க.வுக்கு இருக்கும் நெருக்கடி. நியாயமாகப் பார்த்தால், எடியூரப்பா தார்மிக அடிப்படையில் தனது பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் எடியூரப்பா. 

                    தனது கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படியொரு ஊழலை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் பா.ஜ.க.வின் போக்கு தற்போது அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. முதலில் கர்நாடகத்தில் உள்ள ஊழலுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி யாரெல்லாம் ஊழல் புகாரில் சிக்கினார்களோ அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கிக் கொண்டே வருகிறது என்கிற தார்மிக பலம்தான் காரணம். சசி தரூர், மும்பையில் முந்தைய முதல்வர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கல்மாடி மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வால் இதுவரை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை உடைப்பேன் என்று அவர் சொல்வதாக மேலிடத்துக்குத் தகவல் பறக்கிறது. தென்னகத்தில் தனது சக்தி கேந்திரம் என்று பா.ஜ.க. கருதும் கர்நாடக அரசை இழக்க அந்தக் கட்சி தயாராக இல்லை. அவரது சவாலைச் சகித்துக்கொண்டு சமாதானம் பேச தில்லிக்கு வரச் சொன்னால் புட்டபர்த்திக்குப் போகிறார் எடியூரப்பா. பா.ஜ.க.வால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. அதை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்த நிலையில் மூன்றாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் அவர். ஆட்சியைவிடக் கட்சியின் கௌரவம்தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாகத் தெரியவில்லை. தனது பதவியைவிட கட்சியின் நன்மதிப்புதான் பெரியதென்று எடியூரப்பாவும் கருதுவதாகத் தெரியவில்லை. 

                     எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நில மோசடி என்பது இந்தியா முழுவதிலும் அரசியல்வாதிகளின் தொழிலாகவே ஆகிவிட்டது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சிக்கு நெருக்கமான தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள், உறவினர்கள், ஏன், அரசுக்குச் சாதகமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு ஒதுக்கீடு என்கிற பெயரில் வீட்டுமனைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.              

                        ஓர் அரசு தனிநபருக்கு நிலத்தை வழங்குகிறது என்றால், அது குறித்து அரசு கெசட்டில் வெளியாக வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் வெளியானாலும்கூட, பலன்பெறும் நபர்கள் யார் என்கிற விவரம் தொடர்புடைய சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதால், அரசு கெசட்டில் வெளியானாலும்கூட யாருக்கும் தெரியாமலேயே போகிறது. யாரோ ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரிலும் அரசு நிலம் மிகக் குறைந்த விலைக்குக் கைமாறுகிறது. 

                    இதைச் செய்யும் அரசியல்வாதிகள் கோடிகோடியாய் லாபம் அடைகிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் மாவட்ட ஆட்சியர்களும்கூட இருக்கிறார்கள். முக்கியமான கோடைவாசஸ்தலங்கள் உள்ள பகுதிகளில் எந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலத்தில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் மனைகள், புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, விசாரித்தால் இன்னும் பல பூதங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளம்பும்.லியோ டால்ஸ்டாய் எழுதிய "6 அடி நிலம்' சிறுகதையை இவர்களுக்கு யார் படித்துக் காட்டுவது?

வரலாறு காணாத ஊழல்!

                       1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

                       இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?
                      
                     இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.    

                         தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை. 

                      பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும். 
                     
                     அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

பிகார் தெரிவிக்கும் செய்தி!

                        பிகார் சட்டப்பேரவை முடிவுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணிக்கும், ராகுல் காந்தியின் செல்வாக்கை நம்பித் தனித்துக் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அரசியல் நோக்கர்கள் பார்வையில் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது. காங்கிரஸம் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கூட்டணியில் இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இந்த அளவுக்குப் படுதோல்வியைச் சந்தித்திருக்காதே தவிர, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது என்பதுதான் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் பாடம்.
                          முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதாக் கட்சிக் கூட்டணி, பிகாரிலுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கில் மூன்று பங்கு இடங்களை வென்று வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது. 2005 சட்டப்பேரவைத் தேர்தலில் 36% வாக்குகளையும், 2009 மக்களவைத் தேர்தலில் 38% வாக்குகளையும் பெற்ற இந்த அணி, இப்போது மேலும் 2% வாக்குகள் அதிகமாகப் பெற்றிருப்பது ஆளும் கூட்டணியின்மீது மக்களுக்கு அதிகரித்துவரும் நம்பிக்கையின் அடையாளம் என்றுதான் கூற வேண்டும்.2005 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் 63% இடங்களில் வென்ற ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் 82% இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியோ, கடந்த தேர்தலில் போட்டியிட்ட 54% இடங்களை மட்டுமே வெற்றிபெற்றதுபோக, இப்போது 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் 89% இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. அதாவது, 10 இடங்களில் போட்டியிட்டால், அதில் 9 இடங்களை வென்றிருக்கிறது.

                   இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி பல சோதனைகளையும், எதிர்ப்புகளையும் நேரிட வேண்டிய சூழ்நிலை. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம். அயோத்திப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிறுபான்மையினரை ஆளும் கூட்டணிக்கு எதிராக ஒருங்கிணைக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம். செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்குக் கிடைத்த வரவேற்பும், கூட்டமும், காங்கிரஸôர் மத்தியில் எழுந்த எழுச்சியும் ஐக்கிய ஜனதா தளத்தின் வாக்கு வங்கியைத்தான் கணிசமாகப் பாதிக்கும் என்று எழுந்த எதிர்பார்ப்பு இன்னொருபுறம். ஆனால், இவை அனைத்துமே மக்கள் மன்றத்தின் தீர்ப்பை எள்ளளவும் பாதிக்கவில்லை என்பதுதான், 2010 பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கும் வியப்புக்குரிய விஷயம்.மதவாதமும் சரி, ஜாதியவாதமும் சரி ஓரிரு தேர்தல்களில் வேண்டுமானால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதால் வெற்றிக்கு உதவக்கூடும். ஆனால், நல்லாட்சி தரப்படாவிட்டால், சநாதனியானாலும் சரி, சாமானியன் ஆனாலும் சரி மக்கள் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த வெகுஜன விரோத ஆட்சியைத் தூக்கி எறிந்து விடுவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.

                  பிகாரைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்பது யாதவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. குர்மி, கோரி போன்ற பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களையும் உள்ளடக்கியது. பிற்படுத்தப்பட்டவர் என்பதால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட லாலுபிரசாத் யாதவ், ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தனது ஆட்சியை யாதவர்களின் ஆட்சியாகவும், தனது குடும்பத்தின் ஆட்சியாகவும் நிலைநிறுத்த முயன்றதுதான் அவரது வீழ்ச்சியின் ஆரம்பமாக அமைந்தது. குர்மி ஜாதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இனத்தவரான நிதீஷ் குமார், லாலுபிரசாத் யாதவைப்போல ஜாதியச் சட்டையை அணியாமல், பிகாரின் வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை முன்வைத்தபோது, மக்களும் அந்தத் தலைவரின் குரலுக்குச் செவிசாய்த்து, அவரது கரங்களை வலுப்படுத்த முன்வந்தனர்.

                       பாரதிய ஜனதா கட்சியின் பிராமணர், சத்திரியர், வைசியர், பூமிகார் போன்ற உயர்ஜாதி வாக்கு வங்கியுடன், நிதீஷ் குமாரின் யாதவரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும், தங்களை ஆதிக்கம் செலுத்தும் ஜாதியான யாதவர்களின் தலைவர் லாலுபிரசாத்துடன் ராம்விலாஸ் பாஸ்வான் கைகோத்தது பிடிக்காத தாழ்த்தப்பட்ட "பாசி' இன வாக்குகளும், வகுப்புக் கலவரங்கள் இல்லாத, வளர்ச்சியை முன்வைக்கும் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக ஆட்சியை ஆதரிக்க முன்வந்த சிறுபான்மையினரின் வாக்குகளும் சேர்ந்தபோது, நிதீஷ் குமாரின் தலைமையிலான ஆளும் கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றியதில் வியப்பொன்றும் இல்லை.உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களைப் போலவே, பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ராகுல் காந்தியின் செல்வாக்கு, வாக்குகளைப் பெற்றுத்தரும் செல்வாக்கு அல்ல என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நல்ல தலைமை இல்லாமல் தத்தளிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் போன்ற யாராவது தலைமை ஏற்பார்களேயானால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பை, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன என்றுகூடக் கருத வாய்ப்பிருக்கிறது.
                   லாலுபிரசாத் யாதவின் குடும்பத்தினர் ஒருவர்கூட இல்லாமல், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பிகாரில் ஒரு சட்டப்பேரவை அமைய இருக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸýம்படுதோல்வியடைந்ததற்கு, அந்தக் கட்சிகளின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையும் ஒரு மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது. காஷ்மீரிலும் சரி, இப்போது பிகாரிலும் சரி, அச்சுறுத்தல்களைப் பொருள்படுத்தாமல் மக்கள் நல்லாட்சியை எதிர்பார்த்து வாக்களிக்க முன்வந்தனர். காஷ்மீரில் ஏமாற்றப்பட்டனர். தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். பிகாரில் எதிர்பார்ப்புப் பொய்க்கவில்லை. மகத்தான வெற்றியை மீண்டும் அளித்திருக்கிறார்கள்.

                       மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வளர்ச்சியை விரும்புகிறார்கள். நல்லாட்சியை விரும்புகிறார்கள். ஊழலையும் குடும்ப ஆட்சியையும் வெறுக்கிறார்கள். இதுதான் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தியாவுக்குத் தெரிவிக்கும் செய்தி!