Saturday, August 21, 2010

தமிழா, நீ பேசுவது தமிழா?


             ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸô இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க'.
           "நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப் பார்ப்போம்.
           ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம். ஒகே.வா. பை!.
       மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில் செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில் புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள்.
          "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.
           நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது.
           தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல் இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன் எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும், மிக்கியுமாக நம் பிள்ளைகள்.
         உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக் கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின் பழக்கமாகப் பார்க்கப்படுகிறது?
        உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""உலகில் உள்ள 6,000 மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும் தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது'' என்று.
     கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம்.
          நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது.
           ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன.
           அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ் நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். "மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்' இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதா?
         தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன? பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை வழங்கியதைப்போல் தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே? நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள்.
          படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச் சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.
         அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு. தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ?
        பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ் வழியில்தான் பயில்கிறார்கள்.
        தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கிடையாது. "வாட்' மா? "டெல்' மா, "ரீட்' பண்ணு, "ரைட்' பண்ணு போன்ற அரைகுறை வாக்கியங்கள்தான்.
      தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.
        எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா? நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின் கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும் இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன் அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.
          நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின் பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம்.
        தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான் போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச் சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
       இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் - வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.
        ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும் வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம் அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
         நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம்.
    கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும் தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய மொழியை அனுமதிக்கிறோம். தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.
       "மம்மி'களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் "அம்மா'க்களை "மம்மி'யாக்க அனுமதியோம். "ம்மா' மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி. உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக் காப்போம். . .

Monday, August 16, 2010

தமிழனின் பெருமை!

                    
                    தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைத் தஞ்சையில் செப்டம்பர் 25,26-ம் தேதிகளில் நடத்துவது என முடிவு செய்திருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் களி(ளை)ப்பில் தஞ்சைப் பெரிய கோயில் மறக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருந்த நேரத்தில், தமிழக அரசு இந்த விழாவை அறிவித்திருக்கிறது. இதற்காகத் தமிழக முதல்வரை தினமணி பாராட்டுகிறது.

                     ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
             தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)

                    தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான். 

                    ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.   

                    ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.   
                                                   
                    எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?   
         
                    இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.   108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது.                          

                    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!நன்றி: தினமணி நாளிதழ்.

Monday, August 9, 2010

தமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம்!

          
                ஆங்கில மோகம் அதிகரித்துவிட்ட இந்நாளில் பட்டப் படிப்பு படித்தவர்களே தாய்மொழியான தமிழில் நான்கு வரிகள் பிழையின்றி எழுத முடிவதில்லை. அதிலும் தமிழை உச்சரிப்பதில் நிறையத் தடுமாற்றம்; குளறுபடிகள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்பதற்காக இதோ ஒரு சிறிய முயற்சி; மொழிப் பயிற்சி உங்களுக்காக...

அச்சுறுத்த வேண்டா:

            ""தமிழில் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகள், மிகக் கடுமையான இலக்கணங்கள், கற்றுக்கொள்வது எளிதன்று'' என்று கூறி இளையவர்களை அச்சுறுத்த வேண்டா. தமிழில்,


""எழுத்தெனப் படுவ
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப...''   


என்றார் தொல்காப்பியர். ஆய்தம் ஒன்று சேர்த்து முப்பத்தோர் எழுத்துகளே தமிழில் உள. கூட்டு ஒலிகளையெல்லாம் எழுத்தெண்ணிக்கையாக்கி அச்சுறுத்தல் ஏனோ?


              ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்து, சிறிய எழுத்து என இருவகையும், ஒவ்வொன்றிலும் இரண்டு பிரிவுகளுமாக மொத்தம் நூற்றுநான்கு எழுத்துகள் உள்ளன என்று நாம் சொல்லுவதில்லை. அன்றியும் ஆங்கிலத்தில் சில எழுத்துகளை ஒலிக்காமலேயே (silent) உச்சரிக்க வேண்டும் (psychology -சைக்காலஜி). சில எழுத்துகளின் ஒலி இடத்திற்கேற்ப மாறுபடும், (put -புட்;but-பட்) இப்படிப்பட்ட சிக்கல்கள் தமிழில் இல்லை. என்ன எழுதுகிறோமோ அதை அப்படியே படிக்கலாம்.


              தமிழில் வல்லெழுத்துகள் இடம் நோக்கி மென்மைபெற்று ஒலிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ka -கந்தசாமி, ga -கணேசன்; cha-சதுப்புநிலம், sa-சட்டம்; tha-தம்பி, dhu-துரை; pa-பம்பரம், பட்டம், கம்பன் (ba). இத்தகைய ஒலி வேறுபாடுகள் வடசொற்கலப்பினால் வந்தவை.
 
தமிழ் இயற்கை மொழி:

               மாந்த இனம் கை, கால்களை அசைத்து முகக்குறிகாட்டி (சைகைகளால்) கருத்தை-எண்ணத்தைப் புலப்படுத்திய நிலையிலிருந்து மேம்பட்டு வாய்திறந்து பேசக் கற்றுக்கொண்ட முதல்மொழி-இயற்கைமொழி தமிழேயாகும். எந்த மொழிக்காரரும், எந்நாட்டவரும் பேசவேண்டுமாயின் முதலில் வாய்திறத்தல் வேண்டும். ஒன்றும் பேசாதிருப்பவரைப் பார்த்து ""என்ன வாயைத் திறக்க மாட்டீங்களா?''  என்போமன்றோ?  வாயை மெல்லத் திறந்தால் தோன்றும் ஒலி "அ'. சற்று அதிகம் திறந்தால்  "ஆ' தோன்றும். இவ்வாறே அங்காத்தலில் தொடங்கி தமிழ் ஒலிகள் (எழுத்துகள்) இயற்கையாகவே-இயல்பாகவே எழுந்தவை என்றுணர வேண்டும்.

ஒலிப்பு-உச்சரிப்பு:

                இந்த இனிய மொழியின் தனிச்சிறப்பு உச்சரிப்பாகும். நாம் இன்று தமிழ் என்னும் சொல்லையே சரியாக உச்சரிப்பதில்லை. தமில், தமிள், டமில் என்று பலவாறு உச்சரிப்பவர் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லில், த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். மூவினமும் தமிழில் அடக்கம். தமிள் வாள்க! என்று மேடையில் முழக்கமிடுகிறார்கள். தமிளா... தமிலா... என்று அழைக்கிறார்கள். "தமிழ்மொழி என் தாய்மொழி" என்ற தொடரை ஒவ்வொருவரும் ஒரு நாளில் பத்து முறையாவது பிழையின்றி ஒலித்திடப் பயிற்சி செய்யவேண்டும். 


                  ""என்ன நேயர்கலே நிகழ்ச்சியைப் பார்த்திங்கலா... உங்கல் கருத்தை எங்கலுக்கு எளுதியனுப்புங்கள்'' என்று ல, ழ, ள மூன்றையும் கொலைசெய்து அறிவிப்பவர்கள் ஊடகங்களில் பலர் உள்ளனர். நிகழ்ச்சி என்னும் சொல்லில் "ச்'சை விழுங்கி, நிகழ்சி என்பது ஒரு தனிபாணி போலும். இவற்றையெல்லாம் எப்படிச் சரிசெய்வது?

நுண்ணொலி வேறுபாடுகள்:
 
                     தமிழில் உள்ள எல்லா எழுத்துகளிலும் வல்லினம், மெல்லினம் என்றிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். அதனால், "சார் இங்கே என்ன "ல'னா சார் போடணும்? வல்லினமா மெல்லினமா? என வினவுவர். பதினெட்டு மெய் எழுத்துகளை மூன்றாக, வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பிரித்துள்ளனர். ய், ர், ல், வ், ழ், ள் இவ்வாறு இடையின எழுத்துகள். மேற்பல் வரிசையின் முன்பகுதி உட்புறத்தை (அண்ணம்) நாக்கின் நுனி கொண்டு தொட்டால் (ஒற்றுதல்) தோன்றுவது ஒற்றல் "ல'கரம். நாக்கின் நுனியை உள்ளே வளைத்து அண்ணத்தை (மேற்பல் வரிசை உட்புறம்) வருடினால் தோன்றுவது வருடல் "ள'கரம். இரு நிலைக்கும் இடையில் நாக்கின் நுனி வளைந்து நின்று தோன்றும் ஒலி "ழ'கரம். இது சிறப்பு ழகரம் என்று சுட்டப்படும். இம்மூன்று ஒலிகளையும் வேறுபடுத்திச் சரியாக ஒலித்தால் பொருள் வேறுபடுதலை அறியலாம்.

எடுத்துக்காட்டுகள்:

தால் - நாக்கு, தாள்-எழுதும்தாள்,
பாதம் (அடி);
தாழ் - தாழ்ப்பாள், பணி(ந்து);
வால் - தூய்மை (வெண்மை)-வாலறிவன், வாலெயிறு;வாள் - வெட்டும் கருவி,வாழ் - வாழ்வாயாக

இப்படிப்பல காட்டலாம்.

(தமிழ் வளர்ப்போம்).நன்றி:

தினமணி நாளிதழ் மற்றும் கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்கள். . .

Friday, August 6, 2010

சலனங்கள். . !


பிரிதலும் சேர்ந்திருத்தலும்
நிரந்தரமில்லை என்றுணர்ந்தபோதும்
பிரிதலில் சலனம்
கொள்கின்றோம்  நாம். . !

என்னே சூட்சமக்காரி நீ ?உன் முகம் பார்த்திராத வரை
       பேசத் துடிக்கின்றேன்
உன் விழி பார்த்த தருணம்
      பேசாமல் ஊமை ஆகின்றேன்
உந்தன் காந்தப் பார்வைதன்னில்
      எம் குரல்வளை சிதறுகின்றதோ..!

மலர்களைக் கூடப் பறிக்க
     மனமில்லாதவள் நீ
என் மனதை மட்டும்
     பறித்துக் கொண்டாயே?

மௌன விரதம் என்கிறாய்
      விழிகளால்  பேசுகின்றாய்

என்னே சூட்சமக்காரியடி  நீ ?

Thursday, August 5, 2010

என் கல்லூரி வாழ்க்கை. . !


தனித்தனியாய் அழகழகாய்
     வெள்ளை வர்ண கட்டிடங்கள்


அழகுக்கழகு சேர்ப்பதற்காய்
    வேலி பின்னப்பட்ட பூங்காக்கள்

மனிதமனத்தை வருடுவதாய்
    ரீங்கார ஓசைபாடும் பறவைகள்

மாணவர்க்கு வழிகாட்டிகளாய்
    வழி அறிந்திராத ஆசிரியர்கள்

ஆசிரியரை சீர் பார்ப்பதற்காய்
    குழுமம் கண்ட நிர்வாகிகள்

இவற்றோடு எதார்த்தமாய்
    குழுமம் குழுமமாய் மாணவர்கள். . !


எதிர்நோக்குகின்ற இலட்சியங்கள்
    ஆர்ப்பரித்து வினாத்தொடுக்க

ஏமாற்றமடைந்த நினைவுகள்
    அழுகுரலில் சீண்டிப் பார்க்க

எதார்த்தமான புன்னகையோடு
     நண்பர்கள் கரம் கோர்க்க

கலக்கமாய் பயணித்தது 
     என் கல்லூரி வாழ்க்கை. . !

பேருந்து நிறுத்தம். . !

ஓர் அந்தி மழைக்காலம் !
மாநகரப் பேருந்தில்
சன்னலோரத்து இருக்கையில்
முன்னவர் சாளரத்தை தாழிட
விசாலமான சாரலில்
நனைந்து கொண்டிருந்தேன் நான். . .

பேருந்து நிறுத்தம்!
சாலையின் அடுத்த விளிம்பில்
சாரலில் முழுவதுமாய் நனைந்த
பெருமிதத்தோடு அவள்,
அவளை ரசித்ததை
உணர்ந்து விட்டால் போலும்
சட்டென்று பின்வாங்கியவள்
மழைநீர் வடிந்த விழிகளில்
மௌனமொழி பேசினாள். . .

முந்நூறு வினாடிகளே
நீடித்தன என்றபோதும்,
முந்நூறு நாட்கள் கடந்தும்
பசுமையான புரிதலை
நிரப்பிச் செல்கின்றது
அந்தப் பேருந்து நிறுத்தம் . . .

 

Wednesday, August 4, 2010

தாய்மைக்கு அழகு. . .!

           நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் 17 லட்சம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். 22 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை தொடும் முன்னர் இறக்கின்றனர். நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் 5 பச்சிளம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரம் கூறுகின்றது. தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 22 குழந்தைகள்இறந்து போகின்றன. மேற்கூறிய அனைத்துக்கும் , குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காததே காரணம்.

சீம்பாலின் அவசியம் ?
           எல்லா குழந்தைகளுக்கும் பிறந்து அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாயின் சீம்பாலை அவசியம் கொடுக்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால், பெரும்பாலோனோர் அதைத் தவிர்த்து விடுகின்றனர். நோய் எதிப்பு சக்தியைப் பெற்றுக்கொள்ள இந்த சீம்பால் உதவும். குறைந்தது 6 மாதம் முடியும் வரையாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு வயது வரை அல்லது அதற்க்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

தாய்ப்பாலின் நன்மை:
            தாய்ப்பால் ஊட்டுவதால் தாயுக்கும் சேயுக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து  கிடைக்கும். தாய்ப்பால் பெற்ற குழந்தைகள் அதிக அறிவுத்திறனுடனும், நல்ல உடல் வளர்ச்சியும் பெறுகின்றனர். சர்க்கரை நோய், காத்து சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் வரும் புற்றுநோய், மூட்டு வாதம், கண் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் வரும் வாய்ப்பு மிக மிகக்  குறைவு.  

தாய்க்கும் நன்மை:
         தாய்ப்பால் ஊட்டுவது, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.தாயின் விரிவடைந்த கருப்பை விரைவில் சுருங்கி பழைய நிலையை அடைய  உதவுகின்றது. தாய்மார்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மனதளவில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

எப்போதெல்லாம்?
          குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாக பால் குடிபதற்கு ஆவலாக இருக்கும். இந்நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது எளிது. பிறந்தவுடன் கொடுக்கவில்லை என்றால், சிறிது நேரத்தில் குழந்தை தூங்கிவிடும். அதன்பின் சிரமம் ஏற்படும். குழந்தைக்கு எப்போதெல்லாம் தேவைபடுகின்றதோ, அப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.24 மணி நேரத்தில் குறைந்தது எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை நோய்வாய்ப் பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


தாய்மார்களே! குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். அது உங்களையும் ஆரோக்கியமாய் வைக்கும். நன்றி:

தினமணி நாளிதழ் . . .

Tuesday, August 3, 2010

இன்றைய இந்தியா . . . !

             லால்பகதூர் சாஸ்திரி என்றொரு மாமனிதர் இந்திய அரசியலில் பல்வேறு தியாகங்களைப் புரிந்து தனக்கென இடம் பிடித்தவர். முன்னாள் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, ஜவாஹர்லால் நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக 1951 முதல் 1956 வரை பணியாற்றியவர்.1956-ல் மகபூப் நகர் என்ற இடத்தில் நடந்த ரயில் விபத்தில் 112 பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பெரிய ரயில் விபத்து இதுதான். விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தவறுக்கும் உயிரிழப்புக்கும் தார்மிகப் பொறுப்பு ஏற்றுத் தனது பதவியைத் துறக்க முன்வந்தார் அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. ஆனால், பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.அடுத்த மூன்றாவது மாதமே, 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி இன்னொரு பயங்கரமான ரயில் விபத்தை இந்தியா சந்திக்க நேர்ந்தது. அரியலூர் பாலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 129 பேர் இறந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த முறை, இனியும் அமைச்சராகத் தான் தொடர்வது சரியல்ல என்று லால்பகதூர் சாஸ்திரி தீர்மானமாகச் சொன்னபோது, பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு சொன்ன வார்த்தைகள், இன்றைய ஆட்சியாளர்கள் அனைவருக்குமே பாடமாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?""எங்கேயோ நடந்த தவறுக்கு, அந்தத் துறையின் அமைச்சராக இருப்பவர் ஏன் ராஜிநாமா செய்து பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கக்கூடும். அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் தார்மிகப் பொறுப்பேற்கும்போதுதான், அவரது தலைமையில் இயங்கும்  அத்தனை பேருமே பொறுப்புடன் செயல்படுவார்கள். நாம் குடிமக்களின் நலனுக்காகப் பதவி வகிப்பவர்கள். அவர்களது நலனைப் பாதுகாக்க அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். இதை மனதில் கொண்டு, தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரியின் முடிவு, வருங்கால சுதந்திர இந்தியாவில் பதவிக்கு வரும் மக்கள் தொண்டர்கள் அனைவருக்கும் நல்லதொரு முன்னுதாரணமாக அமையும். மனதைக் கல்லாக்கிக் கொண்டு ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று பிரதமர் ஜவாஹர்லால் நேரு தந்த விளக்கத்தை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை அடைவதில் அர்த்தம் இல்லை. காரணம்,இவர்கள் அவர்கள் அல்லவே!கடந்த மே மாதம் 28-ம் தேதி மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில் 146 உயிர்கள் பலியானபோது, அது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் சதிச் செயல் என்பது ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகத் தெரிந்தது. இதோ, திங்கள்கிழமை மீண்டும் கொல்கத்தாவிலிருந்து 190 கி.மீ. தூரத்திலுள்ள சைந்தியா ரயில் நிலையத்தில் நடந்திருக்கும் விபத்து நிச்சயமாக எந்தத் தீவிரவாதப் பின்னணியும் இல்லாதது என்பதும் தெள்ளத் தெளிவு.சைந்தியா ரயில் நிலையத்திலிருந்து வனாஞ்சல் விரைவு ரயில் அப்போதுதான் புறப்படுகிறது. அந்தநேரத்தில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் அதே தண்டவாளத்தில் விரைந்து வந்து, வனாஞ்சல் விரைவு ரயிலில் மோதுகிறது.இரவு நேரம். எல்லோரும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்கள். நமது இந்திய அரசின் பார்வையில், வசதி இல்லாத, முன்பதிவு செய்யாத, செய்ய வழியில்லாத பராரி ஏழைகள் மனிதர்களே அல்லவே. அவர்களை நாம் இந்தியக் குடிமக்களாகக் கருதுவதே கிடையாதே. அதனால்தானே, ரயில் எஞ்சினுக்கு அருகே உள்ள முதல் மூன்று பெட்டிகள் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளாக இணைக்கப்படுகின்றன. எந்த விபத்து ஏற்பட்டாலும் முதல் பலி, இவர்களாகத்தான் இருக்கும்.தூங்கி வழிந்து கொண்டு இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடைந்து கிடந்த சாதாரண இந்தியக் குடிமக்களை மரணம் எதிர்பாராதவிதமாகத் தாக்கியதன் பின்னணியில் இருந்தது சதியல்ல. பொறுப்பற்ற தனம்.ஒரு தண்டவாளத்தில் ஒரு ரயில்தான் பயணிக்க முடியும். அப்படியானால், தூக்கக் கலக்கத்தில் உத்தர் பங்கா விரைவு ரயில் வருவதை எதிர்பார்த்து முறையாக சிக்னலைப் போடாமல் விட்டு விட்டார்களா? இல்லை, சிக்னல் இருப்பதைக் கவனிக்காமல் உத்தர் பங்கா விரைவு ரயிலின் ஓட்டுநர் அதே தண்டவாளத்தில் வந்துவிட்டாரா? சிக்னல் போடப்பட்டிருந்தால் தண்டவாளம் தானாகவே இன்னொரு நடைமேடைக்கு உத்தர் பங்கா ரயிலைத் திருப்பிவிட்டிருக்க வேண்டுமே, ஏன் அப்படிச் செய்யவில்லை?அதெல்லாம் போகட்டும். சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர் பங்கா விரைவு ரயில் மெதுவாகத்தானே நுழைந்திருக்க வேண்டும். விரைவாக வந்ததன் காரணம் ரயிலில் ஓட்டுநர் தூங்கி விட்டதாலா? இதற்குப் பதில் சொல்ல அந்த ஓட்டுநர் இப்போது உயிருடன் இல்லை.ரயில்வே லாபத்தில் ஓடுகிறது என்று பெருமை தட்டிக் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், மிக அதிகமான அளவில் எல்லா ரயில்களிலும் பெட்டிகளை அதிகரித்திருக்கிறது. எல்லா தடங்களிலும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரக்கு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல, தண்டவாளங்களின் தரமும் (க்வாலிடி), பலமும் (ஸ்ட்ரென்க்த்), சக்தியும் (பவர்) அதிகரித்திருக்கிறதா என்பது சந்தேகமே.பழைய தண்டவாளங்களில், பழைய தொழில்நுட்பங்களுடன் கணக்கு வழக்கில்லாமல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து லாபம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதன் விளைவுதான் இத்தனை விபத்துகள் என்று ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் எச்சரிப்பது கேட்கிறது.கடந்த பத்து மாதங்களில் இதுவரை 14 ரயில் விபத்துகள் நடந்தேறிவிட்டன. நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி விட்டன. இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நேரமில்லை. அவருக்கு மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்றி, முதல்வர் பதவியில் அமர்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். இந்த ரயில் விபத்தைக்கூட மேற்குவங்க அரசின் கையாலாகாத்தனம் என்று அவர் வர்ணிக்க முற்படலாம்.மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய இன்னொரு லால்பகதூர் சாஸ்திரியும் அல்ல; மன்மோகன் சிங் அதை ஏற்றுக்கொள்ள பண்டித ஜவாஹர்லால் நேருவும் அல்ல. இன்றைய இந்தியா, அன்றைய தலைவர்கள் கண்ட கனவும் அல்ல!நன்றி: தினமணி நாளிதழ்

உலக எண்கள் தமிழ் எண்களே!

               உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கையின் வெற்றியே.


                 ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

                  இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

                மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

                தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

               "எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

                       ""இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

                    மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

                   இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

                  இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

                இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார்.

                ""அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

                ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

                இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

                  டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்).

                   அவர் எழுதுகிறார்: ""1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

                  தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

                  இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

                      இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

                       இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

                     செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

                   தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

                   இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!

நன்றி:

தினமணி நாளிதழ் மற்றும் உதயை மு. வீரையன் அவர்கள். .

Monday, August 2, 2010

எண்ணிக்கை பெரிதல்ல...!

                   இந்திய அளவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 22 கோடிப் பேரில் 12.4 விழுக்காடு மாணவர்கள்தான் கல்லூரி வாசலைத் தொடுகின்றனர். உயர்கல்விக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கக் காரணம், உயர் கல்வி தனியார்மயமாகிப் போனதால் ஏற்பட்டுள்ள மிகஅதிகமான கல்விக் கட்டணம்தான். இது ஒருபுறம் இருக்க, இந்த 12.4 விழுக்காடு பேரும்-அதாவது சுமார் 4.5 கோடிப்  பேர்-தொழில்திறன் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்றால், இதற்குக் கிடைக்கும் பதில், மிகமிகக் குறைவு என்பதுதான். கலை அறிவியல் பட்டம் பெறுவோர் மட்டுமல்ல, பொறியியல் பட்டம் பெறுவோர்கூட ஏட்டளவில் மதிப்பெண் பெறும் புத்தகத் திறனாளர்களாக இருக்கிறார்களே தவிர, அவர்கள் செயல்திறனாளர்களாக இல்லை. அவ்வாறு அவர்களுக்குச் செயல்திறனைக் கற்றுத்தரும் நிலையங்களாகப்  பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடத்திட்டம், கற்பித்தல் முறை எதுவுமே பெரிய மாறுதலைக் காணவில்லை.     

             மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமன்றி, கலை அறிவியல் கல்லூரிகளில்கூட தரமான, கல்வியில் ஈடுபாடுள்ள ஆசிரியர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதும், இவ்வாறாக வெறும் திறமை பெறாத பட்டதாரிகள் உருவாக ஒரு முக்கிய காரணம். இப்போது பணியில் இருக்கிற பேராசிரியர்கள் முழு ஈடுபாட்டோடும், மனசாட்சியோடும் பணியாற்றினாலே போதும், இந்தப் பட்டதாரிகளைத் திறமை பெற்றவர்களாக மாற்றிவிட முடியும். அத்தகைய விடியல் ஏற்படும் என்கிற நம்பிக்கை வெறும் ஏக்கமாகவே ஆகிவிடும் போலிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும்கூட, இந்திய இளைஞர்கள் திறமையாக இருக்கவே செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தகைய இளைஞர்கள்-பெரும்பாலும் பொறியியல், கணினி, மருத்துவம் சார்ந்த துறைகளில் இயல்பாகவே கல்வியோடு திறமை பெற்றவர்களாகவும் வெளிவரத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்களை, அப்படியே அள்ளிச் செல்ல-அறிவுக் கடத்தல் என்றும் சொல்லலாம்-பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகக் காத்திருக்கின்றன. இவர்கள் இந்தியாவிலேயே பணியாற்றினாலும்கூட, அவர்கள் பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியாவில் ஊழியம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2005-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்படி, இந்தியாவில் சிறந்த தொழில்திறன் பட்டதாரி உருவாக ஆகும் செலவு அமெரிக்க மதிப்பில் 20,000 டாலர்கள் மட்டுமே. இவ்வளவு குறைந்த செலவில் அவர்களால் ஒரு அமெரிக்கனை தொழில்திறன் பெற்ற பட்டதாரியாக உருவாக்குவதை கனவிலும் கருதிட முடியாது. ஆகவே, இந்தியாவின் மிகச் சிறந்த பட்டதாரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள். இவ்வாறாக இந்திய அறிவு கொள்ளை போவதால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பின் அளவு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்! இப்போது இந்த அளவு மேலும் உயர்ந்திருக்கும்!தற்போது நடைமுறைக்கு வரக் காத்திருக்கும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் சட்டத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் சொல்லும் வாதம், இந்திய இளைஞர்கள் வெளிநாடுபோய் படிப்பதால் இந்தியாவுக்கு ஏற்படும் அன்னியச் செலாவணி இழப்பு ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுதான். ஆனால் இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கல்விக் கடை விரிக்கும்போது, தங்கள் நாடுகளில் வேலை உறுதி என்கிற இனிப்பைக் காட்டி, இந்தியாவின் சிறந்த அறிவார்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லப்போகிறார்கள். சிறந்த இளைஞர்களை இழக்கப்போவது இந்தியாவாகத்தான் இருக்கும்.நிலைமை இதுவாக இருக்கும்போது, 2020-ம் ஆண்டில் கல்லூரி செல்வோர் எண்ணிக்கையை 6 கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக புதிதாக 800 பல்கலைக்கழகங்களும், 35,000 புதிய கல்லூரிகளும் உருவாக வேண்டும் என்றும் இலக்குகளை அறிவித்துள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல்.சொல்லித்தர நல்ல, திறமையான, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை. உயர் கட்டணங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு முயற்சி செய்யவில்லை. பாடத்திட்டங்களும் பழையபடிதான் இருக்கின்றன. அமைச்சர் சொல்லும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் நிச்சயமாகத் தனியாரால் மட்டுமே நிறுவப்படும். இவர்கள் போட்டி போட்டு மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டு, பெயருக்குப்  பட்டம் வழங்கி வெளியே அனுப்பினால் இவர்கள் என்ன தொழில்திறன் பெற்றிருப்பார்கள்? இவர்களுக்கு யார் வேலை தர முன்வருவார்கள்?இந்த வேளையில், நமக்குச் சமமான மக்கள்தொகை உள்ள சீனாவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தாக வேண்டியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் அண்மையில், நடுத்தர மற்றும் நீண்ட கால திறன் மேம்பாட்டுத் திட்டம் (2010-2020) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம், 2008-ம் ஆண்டு 9.2 விழுக்காடாக இருக்கும் திறன்கொண்ட, பயிற்சிபெற்ற பணியாளர் எண்ணிக்கையை, 2020-ம் ஆண்டில் 20 விழுக்காடாக உயர்த்துவதுதான். 2020-ல் சீன அரசு ஊழியர்களில் 85 விழுக்காட்டினர், நான்கு ஆண்டுகள் கல்லூரியில் படித்தவர்களாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், உயர்கல்வி பெற்றவர்களில் 30 லட்சம் பேரை, விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கிராமங்களுக்கு அனுப்புவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம்.ஆனால், இந்தியாவிலோ வெறும் எண்ணிக்கையைப் பெருக்குவதில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டுகிறது. இப்போதே, பட்டதாரிகள் பலரால் நேர்காணல்களை எதிர்கொள்ள முடியாத, வேலையில்லாத நிலை உருவாகிவிட்டது. இந்தப் புதுக்கூட்டத்தில் பொறியியல் பட்டதாரிகளும்கூட சேர்ந்து கொண்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் எண்ணிக்கையைக் கூட்டுவதில் ஆர்வம் காட்டாமல், திறமையும் தொழில்அறிவும் பயிற்சியும் பெற்றிருக்கும் பட்டதாரிகளை உருவாக்குவதுதான் இன்றியமையாத் தேவை. வெறுமனே பட்டதாரிகள் எண்ணிக்கையைக் கூட்டினால் அது, தனியார் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும். பட்டம் பெறுவோரின் வீட்டுப் பொருளாதாரத்தையோ, நாட்டுப் பொருளாதாரத்தையோ மேம்படுத்த உதவாது.
நன்றி:

தினமணி நாளிதழ் . .