Tuesday, December 21, 2010

மழையின் விளைவு?

கட்டுரையின் மூலம்: புதிய தலைமுறை வார இதழ் (23 திசம்பர் 2010)
 
                            இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், கிராமங்களும், நகரங்களும் திண்டாட்டத்தில் இருக்க, ஒரே ஒரு உயிரினம் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது, அவைகள் தான் கொசுக்கள்.   கொசுக்கள் என்பது நகர வாழ்க்கையின் அடையாளம் என்ற நிலை மாறி, இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. அவைகளின் பெருக்கத்தை தடுப்பது உண்மையில் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் உள்ளது. எனினும் கொசுக்களைப் பற்றி நான் அறிந்தனவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்.

உற்பத்தி கேந்திரங்கள்:
                       பொதுவாகக்  கொசுக்கள் 41  பிரிவுகளாக  3500 வகைகள் உள்ளன. இவைகளின் உற்பத்தி கேந்திரங்கள் தேங்கிய நீர்நிலை, பிளாஸ்டிக் தொட்டிகள், தேங்காய் குடுவை, குளிர்சாதனப்பெட்டி, பூந்தொட்டி மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத நீர். முட்டையிட்ட பிறகு நீர் வறண்டு  போகினும் 15 நாட்கள்  வரை தாக்குபிடித்து இனவிருத்தி செய்யும் தன்மையுடையன கொசுக்கள்.

அதிக பாதிப்பை உண்டாக்குபவைகள்:

                       3500 வகைகளை கொசுக்கள் இருந்த போதிலும் அதிக பாதிப்பை உண்டாகுவது ஏடிஸ்(aedes) மற்றும் அனோபிலிஸ் வகைகள் தான். மேற்கூறிய இரண்டு வகைகளும் மேற்கொண்டு இரண்டு பிரிவுகளாய் உள்ளன. இதில் ஏடிஸ் வகை கொசுக்கள் உப்பு நீரிலும் தடையில்லாமல் இனவிருத்தி செய்து மனிதன் மற்றும் மிருகங்கள் என்ற வேறுபாடின்றி நோய்களைப் பரப்பும் தன்மையுடையவை .   மற்றவை  அனோபிலிஸ் வகைகள், இவைகள்  நல்ல நீரில் தங்கள் இனங்களை விருத்தி செய்து, மனித இனத்தை மட்டும் தாக்கக்கூடியவைகள்.

எவ்வாறு தற்காத்துக்கொள்வது?       

 •     வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்த்தொட்டி, பூந்தொட்டி இவைகளை முறையாக பராமரிக்கலாம். 
 •     நீர் சேமிப்புக்கலங்களை மூடி வைத்தல் நலம். மாதமிருமுறை சேமிப்புக்கலங்களை சுத்தம் செய்யலாம்.  
 •     குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி நீர் தேங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 •     சாளரங்களுக்கு(windows) கொசுவலைகளைப் பொருத்தலாம். 
 •     நீண்ட நாட்களாய் நீர் தேங்கி இருக்கும் என்ற எண்ணமிருந்தால், கொசு அழிப்பான்களை தெளித்து விடலாம்.
        இனி என்ன நிம்மதியாய் கொசுக்களின் தொல்லையின்றி உறங்கலாம். . . வாழ்க வளமுடன்..... 

  Friday, December 17, 2010

  சேவை மனப்பான்மை

  நன்றி கொல்லிமலைச்சாரல் ஆனந்த் (http://ceoblog.kapsystem.com)

  “ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது”.
  ‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
  ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். ‘நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது’ என்று சீடர்கள் சொல்ல, ‘பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?’ என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.
  காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்”.
  நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
  நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 
  “வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்.”
  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

  தேசிய அவமானம்!

  நன்றி: தினமணி நாளிதழ்(17-12-2010)
               அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 63 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும்கூட, நாம் இன்னும் அடிமைத்தனச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, நமது ஆட்சியாளர்கள் இப்போதும் இந்தியாவின் பலத்தை உணரவில்லை என்பது  மட்டுமல்ல, இந்த மாபெரும் தேசத்தின் சுயமரியாதையையும், தன்மானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை உணர்வுகூட இல்லாமல் இருக்கிறார்களே என்பது வேதனையளிக்கிறது. 
                  அது அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, இந்தியாவை அவமானப்படுத்துவதில் துன்பியல் இன்பம் காண்பதை வாடிக்கையாக்கி விட்டிருக்கின்றன. சீனா நம்மை அவமானப்படுத்துவது புரிகிறது. ஆனால் அமெரிக்காவும் அப்படி இருக்கிறது என்கிறபோது, நமது வெளியுறவுக் கொள்கை தவறாக இருக்கிறதா இல்லை நமது ஆட்சியாளர்கள் முதுகெலும்போடு செயல்படாமல் இருக்கிறார்களா என்பது புரியவில்லை. அமெரிக்க அதிபர்களை நமது நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த வருந்தி அழைத்து வருவதால், இந்தியா தனது சுற்று தேவதை நாடுகளில் ஒன்று என அமெரிக்கா கருதிவிட்டதா என்கிற கேள்வியும் எழுகிறது. 
                  எந்தவொரு நாட்டிலும் சாதாரணப் பயணிகளைப்போல, அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் நடத்தப்படுவதில்லை. விமானநிலையங்களில் அவர்களுக்குத் தனியான வரிசை ஏற்படுத்தி பாதுகாப்புச் சோதனை செய்யப்படுவதுடன், அவர்கள் பணிபுரியும் நாடுகளில் என்ன பொருளை வாங்கினாலும் அதற்கு எந்தவிதமான வரியும் விதிப்பதில்லை என்பது சர்வதேச வழக்கு. 
               ஷாரூக்கான், கமல்ஹாசன் என்று திரைப்பட நடிகர்கள் அமெரிக்காவில் சோதனையிடப்பட்டதை நாம் பெரிதுபடுத்தவில்லை. இவர்களுக்குத் தனி மரியாதை தரப்பட வேண்டும் என்று நாம் கோரவும் இல்லை. ஆனால் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமை பாதுகாப்புச் சோதனை என்கிற பெயரில் அவமானப்படுத்தினால் அது ஒவ்வோர் இந்தியக் குடிமகனையும் அவமானப்படுத்துவது போன்றதல்லவா? அதை எப்படி இந்திய அரசு சகித்தது? ஜிம்மி கார்ட்டரும், பில் கிளிண்டனும், ஜார்ஜ் புஷ்ஷும்  இந்தியா வந்தால், அவர்களை அதேபோல சோதனைக்கு உள்படுத்தினால் அமெரிக்கா மௌனம் காக்குமா?போகட்டும், அது நடந்து முடிந்த கதை. அதிலிருந்து நாம் பாடம் படித்திருக்க வேண்டாமா? அமெரிக்காவிடம் கறாராகப் பேசி, இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்க வேண்டாமா? 
                 சமீபத்தில் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இருவருக்கு பாதுகாப்புச் சோதனையின்போது அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானம்தான், நமது அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தூண்டுகிறது. ஹர்தீப்சிங் புரி என்பவர் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவர். சீக்கியரான ஹர்தீப்சிங்கின் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ஹெளஸ்டன் விமான நிலையத்தில். தான் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியப் பிரதிநிதி என்றும், தூதரக அந்தஸ்துப் பெற்றவர் என்றும் எடுத்துக்கூறியும் அந்தப் பாதுகாப்புச் சோதனையிடும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 
               இத்தனைக்கும் சுற்றுலாப் பயணிகளாகச் செல்லும் சீக்கியர்களைத் தலைப்பாகையை அவிழ்த்துக் காட்டச் சொல்வதில்லை. இந்தியத் தூதரக அதிகாரி என்பதால் வேண்டுமென்றே அந்த அதிகாரிகள் ஹர்தீப்சிங் புரியைக் கேவலப்படுத்தினார்கள் என்பது தெளிவு.
                கடந்த வாரம், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் இதேபோல, மிஸ்ஸிஸிப்பி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்தியத் தூதர் என்ற முறையில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுடன் செயல்படும் உயர் அதிகாரி மீரா சங்கர். அவரது குற்றம் சேலை கட்டி இருந்தது. உங்கள் சேலையை அவிழ்த்துக் காட்டுங்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரை ஒரு சாதாரண பாதுகாப்பு அதிகாரி கேட்பது என்றால், இந்தியாவை எந்த அளவுக்கு அவர்கள் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். 
              சில மாதங்களுக்கு முன்னால் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குரேஷி இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றார். வழியில் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறப்பதாக ஏற்பாடு. அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் பாதுகாப்புச் சோதனைக்கு அவர் உள்படுத்தப்பட வேண்டும். ஏதாவது அசம்பாவிதமோ, அவமரியாதையோ அவருக்கு ஏற்பட்டு விடலாகாது என்பதற்காக, அமெரிக்க வெளிவிவகாரத் துறை லண்டனில் இருக்கும் அமெரிக்கத் தூதரை அவருடன் கூடவே இருந்து விமானத்தில் ஏற்றி அமர்த்தும்படி உத்தரவிட்டது.   
                 நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு ஷேக்குகளின் மனைவியரையும் அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோகூட நினைவில்லை. அப்படி ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால் அடுத்த நொடியே, பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல் ஹில்சும் அலறித் துடித்திருக்கும். வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வராமல் போனால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பமே ஏற்படும் என்பது அவர்களுக்குத் தெரியும்.     
               எந்தவொரு நாடும் தனது பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். நமது இந்தியாவைப்போல, தலைவர் வீட்டு நாய்க்குட்டி என்பதற்காக அதற்கும் சலாம் போடும் பழக்கம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லை என்பதும் உண்மை. அமெரிக்கா பாதுகாப்பு விஷயத்தில் நம்மைப்போல இல்லாமல் விழிப்புடன் இருப்பதை நாம் பாராட்டுவதுடன் பின்பற்றவும் வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.           
                    பாதுகாப்புச் சோதனைக்குத் தூதரக ஊழியர் உள்படுத்தப்படுவதில்கூடத் தவறில்லை. ஆனால், சேலையைக் கழற்றித்தான் இந்தியத் தூதரைச் சோதனையிடுவேன் என்பது ஆணவத்தின் உச்சகட்டம் அல்லவா? நாம் பிறந்த புண்ணிய பூமிக்கு இழைக்கப்படும் அவமானம் அல்லவா அது? 
                      நிமிர்ந்து நிற்கவும், எதிர்த்துக் குரலெழுப்பி அமெரிக்காவை எச்சரிக்கவும் நாம் ஏன் தயங்குகிறோம்? ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக நமது தேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன?

  Thursday, December 16, 2010

  ஒப்பீடு

  நன்றி: ஆனந்த் @ http://ceoblog.kapsystem.com/
              ஒருவர் இன்னொருவருடன் ஒப்பீடு செய்வது உயர்வைத் தராது. இதோ.. ஓஷோ சொல்வதைச் செவிமடுப்போம். துறவி ஒருவர் என்னுடன் உரையாடியபோது, ஒப்பீடு ஒரு வகையில் நல்லது என்றார். மகிழ்ச்சி இல்லாத மனிதர்களைக் கண்டுகொள்வதே மகிழ்ச்சியின் இரகசியம் ஆகும் என்று விளக்கினார். ‘முடமானவனைப் பார்த்து, நடப்பவன் மகிழலாம். விழியற்றவனைப் பார்த்து, பார்க்க முடிந்தவன் மகிழ்ச்சி கொள்ளலாம். ஏழையைப் பார்த்து, ஓரளவு வசதியுள்ளவன் மனநிறைவு அடையலாம்’ என்று சொல்லிக் கொண்டே போனவரை நான் தடுத்து நிறுத்தினேன். ‘ஓர் எளிய உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஒருவன் இன்னொருவனுடன் ஒப்பீடு செய்யத் தொடங்கிவிட்டால் அவனைவிட அதிர்ஷ்டக் குறைவானவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கமாட்டான். அவனைவிட அழகு, அறிவு ஆகியவை அதிகம் உள்ளவனுடனும் வலிமையுள்ளவனுடனும் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து துயரமடைவான். நீங்கள் அவனுக்கு மகிழ்ச்சியின் ரகசியத்தைச் சொல்லவில்லை. துயரத்தின் ரகசியத்தை சொல்லிக் கொடுக்கிறீர்கள்’ என்றேன். யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒப்பிடுவது போட்டி மனப்பான்மையை உருவாக்கும். நீ ஒரு முறை போட்டி போடத் தொடங்கிவிட்டால், அதற்கு முடிவே இல்லை!!!
                ஓஷோவின் இந்த வார்த்தைகள், நம்முன் ஓயாமல் ஒலிக்கட்டும். மனத் திருப்திக்கான வழிமுறைகள் மனிதனுக்குள் இல்லாவிட்டால் மகிழ்ச்சிக்கான வாசற் கதவுகள் ஒருபோதும் திறக்காது. தொடுவானத்துக்கு அப்பால் மாயத் தோற்றமிடும் ரோஜாக்களின் கூட்டத்தைக் கனவில் கண்டு மகிழ்வதைவிட, நம் வீட்டு ஜன்னலுக்கு வெளியில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாப்பூவின் ஸ்பரிசத்தில் பரவசம் கொள்வதே வாழ்வின் புத்திசாலித்தனம்.

  அடுத்தவருடன் நம்மை ஒப்பிட்டு அமைதி இழக்காமல், நம் இயல்புகளுடன் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். வாழ்க்கை, நாம் நினைப்பதைவிட குறைவான காலம் கொண்டது. 
  உன்னிடம் இருப்பதோடு திருப்தி அடைவாயாக. ஒருவன் எல்லாவற்றிலும் முதல்வனாக முடியாது.