Tuesday, July 19, 2011

எழுதுகிறேன் ஒரு கடிதம். . !


 
                   அன்பு நண்பனுக்கு, என்றும் மறவாத நினைவுகளுடன் சேதுராமன் வரையும் மடல். . . அம்மாவும் அப்பாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் அலுவல் சார்ந்த பணிகளில் எந்தவித தொய்வுமின்றி நடந்து கொண்டு இருக்கின்றது, உந்தன் புது வேலை எவ்வாறு உள்ளது என்பதனைப் பற்றி தெரிவிக்கவும்.

               கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "Team Everest" நண்பர்கள் சிலருடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லம் சென்று வந்தேன். அந்த அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இக்கடிதத்தை எழுதுகின்றேன். அந்த இல்லத்தில் கிட்டத்தட்ட 28 பாட்டியம்மாக்கள் இருக்கின்றனர், நான் உடன் சென்ற நண்பர்களில் சிலர் அடிக்கடி சென்று வருவதால் , எங்களது வருகையை எதிர்நோக்கி இருந்தனர். நம்மோடு நேசம் கொள்ள குழந்தைகள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது என்பதனை உணர முடிந்தது. முறையான அறிமுகம் செய்து கொண்டோம். சென்ற நண்பர்கள் இரு குழுவாகப் பிரிந்து சிறு சிறு போட்டிகள் நடத்தி பாட்டிமார்களை புத்துணர்வுடன் இருக்கச்செய்தோம். பாட்டிமார்களுக்கும் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒரு மகிழ்வான தருணமாய் அமைத்தோம். குடிப்பழக்கத்தின் தீமையையும், தாய்மையின் மேன்மையும் உணர்த்தும் வண்ணம் குறு நாடகமும் அரங்கேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவித்யா என்ற எங்கள் தோழிக்கு பாட்டிமார்களுடன் இணைந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, பாட்டிமார்களிடம் இருந்து விடை பெற்றோம்.

 
                  இல்லத்தில் நடந்த நிகழ்வுகளை யோசித்தவாறே எனது அறைக்கு வந்து சேர்ந்தேன். அறைக்கு வந்து சேர்ந்த பின்பும் என் மனம் ஏனோ அவர்களது(பாட்டிகளது) வாழ்க்கை சூழலையே சுற்றி வந்தது. நாங்கள் எங்களது விளையாட்டுகளாலும், வேடிக்கைகளாலும் மகிழ்வித்தபோதும், பெரும்பாலானவர்களின் சிரிப்பில் முழுமை இல்லை என்பதனைத் தான் என் மனம் இடையிராது சொல்லிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக பெரும்பாலான பாட்டிகளுக்கு மகனோ, மகளோ இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அன்னையிரை விடுதில் விட்டு வாழவேண்டிய நிலைக்கு நம் சமூகம் வந்து விட்டதோ என்ற அச்சம் தோன்றிவிட்டது.
                  நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரைக்கும் , நமது அன்னையரும், தந்தையரும் நம்மைப்போற்றி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது , நான் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது , இரவு பகல் பாராது, அயராது கண்விழித்து பார்த்துக்கொண்ட அம்மாவையும், தமது வியாபாரத்தில் தொடர்ந்து இழப்புகளையே சந்தித்த போதும் கலங்காத என் தந்தை, எனக்காக சிந்திய துளிகளையும் மறக்க கூடுமா?. ஏன் இந்த நொடிப்பொழுதில் அவருக்கு விக்கல் எடுத்தாலும், எனக்கும் தங்கைக்கும் அலைபேசியில் அழைத்து, "சாமி நல்ல இருக்கியாப்பா" என்று நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றவர்கள். ஏன் உனக்கும் அண்ணனுக்கும் இல்லை என்று சொல்லாமல், பார்த்து பார்த்து செய்கின்றனரே, உமது தாயும் தந்தையும்.
                  நமது வாழ்வுதன்னில் இழையோடி இருக்கும், இந்த பிணைப்புகள் ஒவ்வொரு மகனின், மகளின் வாழ்விலும் இருக்கும் என்பது திண்ணம். இவ்வாறு இருக்க, ஏன் முதியவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி என்னில் எழுகின்றது, ஏன் உன்னிலும் எழக்கூடும். எந்தவொரு பெற்றோரும் வெறும் உடல் சுகத்திற்க்காக மட்டும் பிள்ளைகளை ஈன்று எடுப்பதில்லை. இல்லையெனில் 10 மாதம் வரைக்கும் சுமந்து மறு பிறப்பெடுத்து நம்மை பெற வேண்டியதும் இல்லை, வளர்க்கவும் தேவையில்லை தானே. பெற்றோர்களின் அன்பைப் பற்றிய பிள்ளைகளின் மதிப்பீடுகள் வெவ்வேறானதாய் இருந்தாலும், பெற்றோர்களது அன்பு சுழியமாய் இருந்து இருக்க வாய்ப்பில்லை என்பது தானே உண்மை. ஒரு வேளை தனது பெற்றோரைப் பற்றிய ஒருவனது மதிப்பு சுழியமே என்றாலும் கூட,அவன் இந்த உலகத்தில் உயிர் பெறக்காரணமாய் இருந்த, அந்த இரண்டு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது தானே, தர்மம்.
         ஆறறிவு பெற்றிருக்கும் மனிதராய் பிறந்ததன் மேன்மையைப் பெற்றோரைப் பாதுகாத்தலின் மூலம் நிறைவு செய்வோம். இனியும் புதியதாய் முதியோர் இல்லங்கள் முளைக்காமல் தடுக்கப்பட வேண்டும். ஒரு நண்பனாய் உம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் பெற்றோரை அலைக்களியவிடாமல் என்னுடன் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள். மற்றைய நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்.

                                      எங்களோடு கரம் கோர்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்,