Monday, September 5, 2011

ஆசிரியர் தினம் - பதிவாய் ஒரு பகிர்தல்முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5  அன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்
தினம் கொண்டாடப்படும். மாணவர்கள் தங்கள் அன்பின்
அடையாளமாக வகுப்பு ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பதும், இனிப்பு வழங்குவதும், சில இடங்களில் பாராட்டு விழாக்களுமாக நடைபெறும் இந்த வேளையில், இன்றைய நவீன காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் என்பவரை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

திருவாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும், அறிவியலறிஞர் மற்றும் முன்னாள்  குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அவர்களும், பல்வேறு பொறுப்புகளை வகித்த போதும், அவர்கள்  விரும்பியது ஆசிரியப்பணியைத் தான். ஆசிரியப்பணியைப் பெரிதும் போற்றக் காரணம் என்னவாய் இருக்க கூடும் என்று பள்ளி நாட்களில் நான் வியக்காத நாட்களே இல்லை. மனிதனின் வாழ்வுதன்னில்
ஆசிரியர்(குரு) என்பவர் இல்லாமல் இருக்க வாய்ப்புகளே இல்லை,
ஒரு வேளை  எவராவது குரு இல்லாமல் இருப்பாரெனில்,  அவர் ஐந்தறிவுள்ள உயிரினங்களுடனும் ஒப்பிட இயலாதவர்.

எனது பத்தொன்பது வருட  பள்ளி, கல்லூரி நாட்களில், நான் சந்தித்த, எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை அறுபதைத்
தாண்டும்.  ஆனாலும் என் மனதில் இன்றளவும் நிலைத்து நின்று, தமது எண்ணங்களால் எம்மை  ஆட்கொள்பவர்கள் ஒரு சிலரே. ஒரு மாணவன்  பள்ளியை விடுத்துச் சென்று பல ஆண்டுகள் கடந்த பின்னும் தமது ஆசிரியரை நினைவு கூர்வதும், தமது சந்ததியினருக்கும் தமக்கு கிடைத்தது போல ஆசிரியர் கிடைக்க மாட்டாரா? என்று எண்ணத் தூண்டுபவரே உண்மையில் நல்லாசிரியராய் இருக்க முடியும். இத்தகைய ஆசிரியர் எவரும் விருதுகளுக்காகவும், புகழுக்காகவும் பணியாற்றுவதும் இல்லை, அவைகளை எதிர்பார்ப்பதும் இல்லை.

பொதுவாகவே ஆசிரியர்களை மூன்று வகையினராய்ப் பிரிக்கலாம்.  பாடப் புத்தகங்களில் உள்ளனவற்றை தெளிவாய்ப் புரியவைத்து, நல்ல மதிப்பெண் பெற வைக்க முனைவோர் ஒரு வகையினர், இவர்கள் அறிவைப் புகட்டுபவர்கள். உண்மையில் மாணவனுக்கு பாடத்தில் ஆர்வம் இல்லையென்றபோதும், அவர்களுக்கு விருப்பத்தை உண்டாக்குபவர்கள் மற்றொரு வகையினர், இவர்கள் அறிவைத் திணிப்பவர்கள். இவை தவிர்த்து மாணவனை சிந்திக்கத் தூண்டி, அவனுக்கு என்ன தேவை என்பதனை மாணவனே முடிவெடுக்கும்
படித் தூண்டுபவர் மற்றொரு வகையினர் இவர்கள் அறிவைத் துலக்குபவர்கள். புகட்டிய அறிவும், திணித்த அறிவும் சிறிது காலத்தில் கரைந்து விடுகின்றது, ஆனால் துலக்கிய அறிவானது மென்மேலும் பொலிவுற்று மாணவரைத் தரம் உயர்த்துகிறது.

தகவல்  தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் மக்கள் மதிமயங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், விரக்தியுடன் ஆசிரியப் பணியைத்  தொடங்கியவர் சிலர் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தயவு கூர்ந்து நினைவில் கொள்ளுங்கள், தங்களால் பலநூறு பொறியாளர்களையும் , சிலநூறு மருத்துவர்களையும், தங்களது சேவையினால் உருவாக்க இயலும். அதனால் பொறியாளர், மருத்துவர், மற்றவரை விடத் தாங்களே உயர்ந்தவர்கள். நான் ஆசிரியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள், தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணிக்கும் பெருமை சேருங்கள்.

நாங்கள்(சமூகம்) ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், தங்களது மாணவரை ஒரு  மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆட்சியராகவோ மாற்றும் முன்னர் அவருள் உறங்கும் மனிதத்தை எழுப்புங்கள், அவற்றைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கச் செய்யுங்கள். சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலையில், ஆசிரியராகிய தங்களால் மட்டுமே செய்ய இயலும்.

 ஆசிரியர் தினம் என்றதும் என்னுள் எழுந்த வெண்பா:


திக்கற்றவர்களைத் திக்குமுக்காடச் செய்து திகட்டாத
திளைப்பில் ஆழ்த்துபவரே ஆசிரியர். 


ஆசிரியர்  அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் காணிக்கையாக்குகின்றேன்.

Tuesday, August 30, 2011

அந்திநேரத்தென்றல் கனவுகளாய். . !

சேலையூரில் உள்ள, ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தில் எமது நண்பர்களுடன் சென்று வந்த அனுபவங்கள், எமது பதிவாய் ..          ஞாயிற்றுக்கிழமை மதியம், அனைவரும் இன்று 3.30 மணிக்கு சேலையூர் சந்திப்பில்(CAMP Road) சந்திக்கிறோம் என்று செய்தியோடு டேனியலிடம்  இருந்து குறுஞ்செய்தி வந்தது. எல்லாரும் கண்டிப்பாக 3.30 மணிக்கு அனைவரும் வந்துவிடுங்கள் என்று கூறியபோதே, 4 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் சரியாய் இருக்கும் என்று எண்ணி சற்றேக் கண்ணயர்ந்ததில் ஒரு அழகான கனவு.
          மழைமகன்(வர்ணன்) இடையிராது தனதன்பினை மண்மகள் மீது பொழிந்து கொண்டிருப்பதாலும், கதிரவனும் மேகம் என்னும் போர்வையினை போர்த்தி இருந்ததாலும், மாலை இதமானதாகவே இருந்தது.
அந்த அந்திநேரத் தென்றலில் திளைத்தவாறு ஒரு முப்பது பேர் கொண்ட குழு, சேலையூரில் இருந்த ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தை அடைந்து இருந்தனர்.
          அடடா என்ன அழகு, மழை மேகம் கண்ட மயில் போல, தனது தாயைக் கண்ட கன்றுக்குட்டியைப் போல பாட்டிமார்களது முகத்தினில் அத்துனை மகிழ்ச்சி. நாம்  வாழ்நாள் முழுதும் சம்பாதிக்கும் அனைத்துப் பொருட்களை கொணர்ந்து கொட்டினாலும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது. இன்னுமொரு தித்திக்கும் விடயம் என்னன்னா பத்து பேருக்கு மேல புதியதாய் Team Everest குழுவில் இணைந்தவர்கள். அனைவரும் பாட்டிமார்களுடன் விசாரிப்புகளில் கரைந்து கொண்டிருந்தோம்.  திடீரென்று ஒரு அபயக்குரல் அனைவரும் குரல் வந்த திசையில் திரும்பினோம்.
அட நம்ம ஒருங்கிணைப்பாளர் தம்பி. இந்த பையன் பார்க்க  சுமாராக இருந்தாலும், ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலுடன் வந்து இருந்தார்.
கதை சொல்லுதல்: எல்லாரும் "punch" பஞ்சுவோட  "பீர்"பால் கதை தான் என்றிருக்க, அவரின் சீடர் கதை சொல்ல வந்தார், யாரந்த சீடர் என்று யோசிக்க வேண்டியதில்லை, வேற யாரு நம்ம சரண்யா தான். குரு "பீர்"பால் கதைகளில் தேர்ந்தவர் என்றால், சீடர் மரியாதையை ராமன் கதைகளை ஒரு வார்த்தை கூட தவறாமல் சொல்லி விட்டார். சரண்யா சொன்ன கதையிலே மதி மயங்கி, கதை சொல்லுதல் முடித்துக் கொள்ளப்பட்டது. (மனசுக்குள்ள எல்லாருக்கும் மகிழ்ச்சி)
இசையும், பந்தும்: நண்பர் ஒருவர் புரட்சி தலைவரை தனது நடனத்தில் அறிமுகம் செய்யலானார். ஸ்ரீதர் இரண்டு நிமிடங்கள் தூய தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்புறம் ஒரு அக்கா, அடுப்பைப் பற்ற வைக்காமலே சாம்பார் வைத்து விட்டு சென்றார். பிளாரன்சு பாட்டி கோழி இறைச்சி சமைப்பதை விளக்கினார். எங்களில் இருந்த ஒரு பாடகி பாட்டுப் படிக்கலானார்.
வளிக்கூடு(ballon) நிரப்பி வெடிக்க வைத்தல்: அணிக்கு இருவராய் நால்வரும், ஊதிய பலூனை வெடிக்க வைப்பதில் பாட்டிமார்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். பாட்டிமார்களுக்காய் தம்ளரை அடுக்கும் போட்டியும்,யார் வீரர் என்று தீர்மானிக்க முறுக்கு தின்னும் போட்டியும் நடந்தது.  ஒவ்வொரு நிகழ்வும் பாட்டிமார்களின் உள்ளத்திலும், இளையவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி மழையைப் பொழிந்தது.
          எங்கள் வாளி வித்துவான், தனது கணீர்க் குரலில் பாடல்களைப் பாடி எல்லோர் மனங்களையும் ஒரு சேர குவிர்த்து இருந்தார். அதுவரை அமைதியாய் இருந்த புலி ஒன்று திடீரென்று பாய்ந்து, நடனத்தில் அசத்தி சென்றார்.  இறுதியாய், பழங்களையும் சிற்றுண்டிகளையும் பகிர்ந்துக்கொண்டு கிளம்பும் போது, பாட்டிமார்களின் இதழ்கள் ஒரு சேர ஒலித்தது, அடுத்த வாரம் வர இயலாதா என்று?
பலரின் மனதில் இனம் புரியாத கவலையுடன் கிளம்பலானோம். கனவும் கலைந்தது
குறிப்பு:
இல்லத்திற்கு வந்து பாட்டியர்களுக்கும், சகதோழர்களுக்கும் மகிழ்வினை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்பு இருந்தே குறுந்தகவலின் மூலம் நினைவூட்டிக் கொண்டு இருந்த நண்பர் டேனியல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையில் இருக்கும் நண்பர்களும், சென்னையைப் பிறப்பிடமாய் கொண்ட அன்பர்களும் இயன்றால் இல்லம் வந்து செல்லுங்கள்.
=======================================================================
மாதம் ஒருமுறையேனும் பிறருக்கு உதவுவோம். 
(12/365)
=======================================================================


Thursday, August 11, 2011

மானுடம் தோற்குதம்மா?


நன்றி: தினமணி நாளிதழ்(11-08-2011)

மானுடம் தோற்குதம்மா என்ற தினமணியின் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு மீள்பதிவு செய்துள்ளேன்.

 சோமாலியாவில் சுமார் இருபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலவரங்களில் மனிதர்கள் இறப்பது மனதை வேதனைப்படுத்தாத அளவுக்கு மிகச் சாதாரண நிகழ்வாக, அது அவர்கள் தலையெழுத்து என்பதாக மாறிவிட்டாலும், கடந்த 90 நாள்களில் ஐந்து வயதுக்குள்பட்ட 29,000 குழந்தைகள் இறந்துவிட்டனர் என்பதை அப்படி சாதாரணமாகக் கருத இயலவில்லை. இந்தக் குழந்தைகள் நோயால் இறக்கவில்லை என்பதும், உணவுப் பஞ்சம்தான் இவர்களது சாவுக்குக் காரணம் என்பதும் வேதனையிலும் வேதனை.

 தகவல் தொழில்நுட்பத்தாலும், வானூர்திகளாலும் உலகம் சுருங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, பால்பவுடர் போன்றவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது சில மணி நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய செயல்தான். உணவுக்கு ஏற்பாடு செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருந்தாலும் இந்த உணவைக் கொண்டு சேர்க்கவிடாமல் தடுக்கிறார்கள் சோமாலிய அரசுக்கு எதிராகப் போரிடும் அல் -ஷபாப் தீவிரவாதிகள். சரி, உணவு தர முடியவில்லை. இவர்களுக்குப் பணமாக உதவலாம் என்று ஐ.நா. திட்டமிட்டால், அந்தப் பணத்தைத் தீவிரவாதிகள் பறித்து, ஆயுதம் வாங்கப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை காரணமாக அந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. யாரோ தரும் உணவைத்தான் தடுக்கிறார்கள், நாமாவது வெளியேறிவிடுவோம் என்றால் அதையும் தடுக்கிறார்கள் அவர்கள். உணவு கிடைக்க வழிஇருந்தும், தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள இந்த மரணத்தை - பட்டினிச் சாவுகள் என்பதைக் காட்டிலும், ஈவுஇரக்கமற்ற கொலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 அல் - ஷபாப் அமைப்பு அல் -காய்தா தீவிரவாத அமைப்புடன் இணைவு பெற்ற அமைப்பு என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் எழுதுகின்றன. இப்படி, ஏதோ பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரியைப் போல, இந்தத் தீவிரவாத அமைப்பை விவரிப்பதேகூட அந்த அமைப்பை மகிமைப்படுத்துவதைப் போல அல்லவா இருக்கிறது. இந்த அமைப்பின் முறையற்ற அதிகாரத்துக்குள் சோமாலியாவின் பாதிப் பகுதி அஞ்சிக் கிடக்கிறது. அரசாங்கம் இங்கே செயல்படமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செயல்பட முடியவில்லை. மிகச் சில அமைப்புகள் மட்டுமே தைரியமாக இப்பகுதிகளுக்குச் சென்று நிலவரங்களை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

 கடந்த மூன்று ஆண்டுகளாகவே சோமாலியாவின் தென்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் எல்லாவற்றையும் இழந்து, வாழும் வழியின்றித் தவிக்கும் ஏழைகள் தலைநகருக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகிற மக்கள் முகாமுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். உணவு, உடை, தண்ணீர் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு.

 இந்த ஏழைகளுக்குத் தரும் ரேஷன் உணவு தானியங்களையும் தூக்கிச் செல்ல முயல்கிறது சோமாலியா ராணுவம். அண்மையில், ஒரு முகாமுக்கு வழங்கப்பட்ட 290 டன் ரேஷன் தானியங்களை ராணுவத்தினர் தள்ளிக்கொண்டுபோக முயற்சித்தபோது, அதைப் பட்டினியாக உள்ள மக்கள் எதிர்த்ததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது ராணுவம். தடுத்த மக்களில் 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராணுவ வீரர்கள் போய்விட்டனர். கேள்விக்கொருவர் இல்லை.

 1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள் மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

 இந்தப் பஞ்சம் இன்று திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த 2009 முதலாகவே வறட்சி காணப்பட்டு வருகிறது. அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான உணவு மற்றும் வேளாண் அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கவே செய்தன. ஆனால், ஏழை விவசாயிக்குத் தன் நிலத்தை விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை. மழைவரும் என்ற நம்பிக்கையில் பயிர் செய்து காத்துக் கிடந்து, ஏமாறுவது மூன்று ஆண்டுகளாகத் தொடர்கிறது.

 ரமலான் மாதத்தில் இப்படி ஏழைகளை வெளியேறவிடாமல் தடுப்பது சரியல்ல என்று பலரும் விமர்சிக்கப்போய், அல் -ஷபாப் தீவிரவாதிகள் கொஞ்சம் மனமிரங்கி, உணவை வந்து வழங்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால், இப்போது வருவதற்கு யாரும் தயாராக இல்லை. பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே- இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே..

 கடந்த மூன்று நாள்களாக, இங்கிலாந்தில் சில கட்டடங்களைத் தீக்கிரை செய்து, பொருள்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் பெரும் பிரச்னையாக (?) மாறிவிட்டதால் சோமாலியா பற்றிய செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வேறு செய்திகளே இல்லாதபோது, மீண்டும் இவர்களது பட்டினிச் சாவுகள் பேசப்படலாம்.

 "மனித உயிர் என்ன வெல்லமா?' என்று கேட்கக்கூட நாதியில்லாத நிலையில், நாம் நாகரிகம், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை, மக்களாட்சி என்று பேசுகிறோமே, உலகில் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? நாம் போடுவதெல்லாம் வெறும் வேஷம்தானோ?

 பயமாக இருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நமது சந்ததியர் "சோமாலியா' சந்திக்கும் கொடுமையை அனுபவிக்க வேண்டிவருமோ என்னவோ, யார் கண்டது?

Tuesday, July 19, 2011

எழுதுகிறேன் ஒரு கடிதம். . !


 
                   அன்பு நண்பனுக்கு, என்றும் மறவாத நினைவுகளுடன் சேதுராமன் வரையும் மடல். . . அம்மாவும் அப்பாவும் நலமாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என் அலுவல் சார்ந்த பணிகளில் எந்தவித தொய்வுமின்றி நடந்து கொண்டு இருக்கின்றது, உந்தன் புது வேலை எவ்வாறு உள்ளது என்பதனைப் பற்றி தெரிவிக்கவும்.

               கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று "Team Everest" நண்பர்கள் சிலருடன் சென்னையில் உள்ள முதியோர் இல்லம் சென்று வந்தேன். அந்த அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி இக்கடிதத்தை எழுதுகின்றேன். அந்த இல்லத்தில் கிட்டத்தட்ட 28 பாட்டியம்மாக்கள் இருக்கின்றனர், நான் உடன் சென்ற நண்பர்களில் சிலர் அடிக்கடி சென்று வருவதால் , எங்களது வருகையை எதிர்நோக்கி இருந்தனர். நம்மோடு நேசம் கொள்ள குழந்தைகள் இருக்கின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கின்றது என்பதனை உணர முடிந்தது. முறையான அறிமுகம் செய்து கொண்டோம். சென்ற நண்பர்கள் இரு குழுவாகப் பிரிந்து சிறு சிறு போட்டிகள் நடத்தி பாட்டிமார்களை புத்துணர்வுடன் இருக்கச்செய்தோம். பாட்டிமார்களுக்கும் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒரு மகிழ்வான தருணமாய் அமைத்தோம். குடிப்பழக்கத்தின் தீமையையும், தாய்மையின் மேன்மையும் உணர்த்தும் வண்ணம் குறு நாடகமும் அரங்கேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவித்யா என்ற எங்கள் தோழிக்கு பாட்டிமார்களுடன் இணைந்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, பாட்டிமார்களிடம் இருந்து விடை பெற்றோம்.

 
                  இல்லத்தில் நடந்த நிகழ்வுகளை யோசித்தவாறே எனது அறைக்கு வந்து சேர்ந்தேன். அறைக்கு வந்து சேர்ந்த பின்பும் என் மனம் ஏனோ அவர்களது(பாட்டிகளது) வாழ்க்கை சூழலையே சுற்றி வந்தது. நாங்கள் எங்களது விளையாட்டுகளாலும், வேடிக்கைகளாலும் மகிழ்வித்தபோதும், பெரும்பாலானவர்களின் சிரிப்பில் முழுமை இல்லை என்பதனைத் தான் என் மனம் இடையிராது சொல்லிக்கொண்டு இருக்கிறது. கண்டிப்பாக பெரும்பாலான பாட்டிகளுக்கு மகனோ, மகளோ இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அன்னையிரை விடுதில் விட்டு வாழவேண்டிய நிலைக்கு நம் சமூகம் வந்து விட்டதோ என்ற அச்சம் தோன்றிவிட்டது.
                  நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து இன்று வரைக்கும் , நமது அன்னையரும், தந்தையரும் நம்மைப்போற்றி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது , நான் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது , இரவு பகல் பாராது, அயராது கண்விழித்து பார்த்துக்கொண்ட அம்மாவையும், தமது வியாபாரத்தில் தொடர்ந்து இழப்புகளையே சந்தித்த போதும் கலங்காத என் தந்தை, எனக்காக சிந்திய துளிகளையும் மறக்க கூடுமா?. ஏன் இந்த நொடிப்பொழுதில் அவருக்கு விக்கல் எடுத்தாலும், எனக்கும் தங்கைக்கும் அலைபேசியில் அழைத்து, "சாமி நல்ல இருக்கியாப்பா" என்று நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றவர்கள். ஏன் உனக்கும் அண்ணனுக்கும் இல்லை என்று சொல்லாமல், பார்த்து பார்த்து செய்கின்றனரே, உமது தாயும் தந்தையும்.
                  நமது வாழ்வுதன்னில் இழையோடி இருக்கும், இந்த பிணைப்புகள் ஒவ்வொரு மகனின், மகளின் வாழ்விலும் இருக்கும் என்பது திண்ணம். இவ்வாறு இருக்க, ஏன் முதியவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றார்கள் என்ற கேள்வி என்னில் எழுகின்றது, ஏன் உன்னிலும் எழக்கூடும். எந்தவொரு பெற்றோரும் வெறும் உடல் சுகத்திற்க்காக மட்டும் பிள்ளைகளை ஈன்று எடுப்பதில்லை. இல்லையெனில் 10 மாதம் வரைக்கும் சுமந்து மறு பிறப்பெடுத்து நம்மை பெற வேண்டியதும் இல்லை, வளர்க்கவும் தேவையில்லை தானே. பெற்றோர்களின் அன்பைப் பற்றிய பிள்ளைகளின் மதிப்பீடுகள் வெவ்வேறானதாய் இருந்தாலும், பெற்றோர்களது அன்பு சுழியமாய் இருந்து இருக்க வாய்ப்பில்லை என்பது தானே உண்மை. ஒரு வேளை தனது பெற்றோரைப் பற்றிய ஒருவனது மதிப்பு சுழியமே என்றாலும் கூட,அவன் இந்த உலகத்தில் உயிர் பெறக்காரணமாய் இருந்த, அந்த இரண்டு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது தானே, தர்மம்.
         ஆறறிவு பெற்றிருக்கும் மனிதராய் பிறந்ததன் மேன்மையைப் பெற்றோரைப் பாதுகாத்தலின் மூலம் நிறைவு செய்வோம். இனியும் புதியதாய் முதியோர் இல்லங்கள் முளைக்காமல் தடுக்கப்பட வேண்டும். ஒரு நண்பனாய் உம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் பெற்றோரை அலைக்களியவிடாமல் என்னுடன் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக்கொள். மற்றைய நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, புதிய தொடக்கத்தை உருவாக்குவோம். இனி வரும் காலங்களில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்குவோம்.

                                      எங்களோடு கரம் கோர்ப்பாய் என்ற நம்பிக்கையுடன்,
                                      

Thursday, April 7, 2011

வெற்றுப்பத்திரிகை!

வெளியீடு: தினமணி நாளிதழ்(07 /04 /2010) 
 
          2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டுக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பரபரப்பான செய்தி வெளிவந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை        ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் பின்னுக்குத் தள்ளிவிடும்.
          ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்திலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் திமுகவின் தலைமையிடமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்திலிருந்து இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியைச் சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக மத்தியப் புலனாய்வுத் துறையினர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும், மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் விசாரித்தனர்.
                  பாருங்கள் அதிர்ஷ்டத்தை, எந்தப் பத்திரிகையும் விசாரணை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர முடியாமல் ஜப்பானை சுனாமி தாக்கிய செய்தி தடுத்துவிட்டது. முக்கிய ஊடகங்களான சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அவர்கள் குடும்ப நிறுவனங்கள் என்பதால் அடக்கி வாசித்து விசாரணை நடந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தவிர்த்துவிட்டன.
                இப்போதும் பாருங்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று, அந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சுமார் 80,000 பக்கங்களுக்கும் அதிகமான அந்தக் குற்றப்பத்திரிகை 654 ஆவணங்களையும், 125 சாட்சிகளையும் முன்வைத்திருக்கிறது. ஒன்பது நபர்களையும், மூன்று நிறுவனங்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டியிருக்கிறது.
                 கைது செய்யப்பட்டுள்ள முக்கிய எதிரிகளான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச்செயலர் ஆர்கே. சந்தோலியா இப்போது எட்டிசலாட் டி.வி. என்று வழங்கப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் உஸ்மான் பால்வா ஆகிய நால்வருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்வான் டெலிகாம், யூனிடெக், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கலைஞர் தொலைக்காட்சி போன்றவை குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன, அவ்வளவே.
 கடந்த 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆ. ராசாவின் காவல் 60 நாளைக் கடந்திருக்கும் என்பதால் அவரைக் கட்டாயமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசாவின் விடுதலை மேலும் தலைவலியை ஏற்படுத்திவிடும் என்பதாலோ என்னவோ அவசரக் கோலத்தில் ஒரு குற்றப்பத்திரிகையைப் புலன் விசாரணைத்துறை தாக்கல் செய்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
                                சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை 80,000 பக்கங்கள் கொண்டது என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, முறையாகக் குற்றங்களைப் பட்டியலிட்டுத் தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் தாக்கல் செய்திருக்கிறதா என்றால் இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும், அரசியல் நிர்பந்தங்களை மீறி நமது புலனாய்வுத் துறையால் செயல்பட முடியவில்லையோ என்கிற தோற்றத்தைத்தான் குற்றப்பத்திரிகை ஏற்படுத்துகிறது.
                      60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள் பிணையில் விடுதலையாகி விடுவார்கள் என்பது, அரைகுறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குக் காரணமாக இருக்க முடியாது. குற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் எதிரிகள் அனைவரும் ஐயம் திரிபறக் கண்டறியப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?
                           சிபிஐ கைது செய்திருப்பதும்கூட தேர்ந்தெடுத்த சிலரைத்தானே தவிர, குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவில்லையே, ஏன்? கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் போயிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், கலைஞர் தொலைக்காட்சி முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? அரசியல் காரணங்கள் சிபிஐயின் கையை ஏன் கட்டிப்போட வேண்டும்?
                           தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டுதான் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் உத்தேச இழப்பு ரூ. 57,666 கோடியிலிருந்து ரூ. 1,76,645 கோடிவரை. ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 22,000 கோடி மட்டும்தானே, ஏன் அப்படி?
                     முறைகேடு நடக்கிறது என்று மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தும், தனக்குப் பலர் தகவல்கள் தந்தார்கள் என்று பிரதமரே வாக்குமூலம் அளித்தும் அவரைப் பற்றிக் குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தைகூட இல்லையே, ஏன்? பிரதமர் மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டவரா?
                           அனில் அம்பானியில் தொடங்கி ரத்தன் டாடா வரை பல பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே, அவர்களை நெருங்க மத்தியப் புலனாய்வுத் துறை பயப்படுகிறதே, ஏன்? ஏனோ தானோ என்று வழக்கை ஜோடித்து, கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களும் தப்பித்துப்போக வழிவகுத்து விடுமோ மத்தியப் புலன் விசாரணைத் துறை என்கிற அச்சம் மேலிடுகிறது. குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தொடர்புள்ள குடும்பத்தினரும் ஏன் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு இடமாகிவிட்டது.
                      சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படாவிட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!