Showing posts with label நலம் பேணுவோம். Show all posts
Showing posts with label நலம் பேணுவோம். Show all posts

Tuesday, December 21, 2010

மழையின் விளைவு?

கட்டுரையின் மூலம்: புதிய தலைமுறை வார இதழ் (23 திசம்பர் 2010)
 
                            இடைவிடாது கொட்டி தீர்த்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும், கிராமங்களும், நகரங்களும் திண்டாட்டத்தில் இருக்க, ஒரே ஒரு உயிரினம் மட்டும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது, அவைகள் தான் கொசுக்கள்.   கொசுக்கள் என்பது நகர வாழ்க்கையின் அடையாளம் என்ற நிலை மாறி, இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. அவைகளின் பெருக்கத்தை தடுப்பது உண்மையில் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாகத் தான் உள்ளது. எனினும் கொசுக்களைப் பற்றி நான் அறிந்தனவற்றை பகிர்ந்து கொள்கின்றேன்.

உற்பத்தி கேந்திரங்கள்:
                       பொதுவாகக்  கொசுக்கள் 41  பிரிவுகளாக  3500 வகைகள் உள்ளன. இவைகளின் உற்பத்தி கேந்திரங்கள் தேங்கிய நீர்நிலை, பிளாஸ்டிக் தொட்டிகள், தேங்காய் குடுவை, குளிர்சாதனப்பெட்டி, பூந்தொட்டி மற்றும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாத நீர். முட்டையிட்ட பிறகு நீர் வறண்டு  போகினும் 15 நாட்கள்  வரை தாக்குபிடித்து இனவிருத்தி செய்யும் தன்மையுடையன கொசுக்கள்.

அதிக பாதிப்பை உண்டாக்குபவைகள்:

                       3500 வகைகளை கொசுக்கள் இருந்த போதிலும் அதிக பாதிப்பை உண்டாகுவது ஏடிஸ்(aedes) மற்றும் அனோபிலிஸ் வகைகள் தான். மேற்கூறிய இரண்டு வகைகளும் மேற்கொண்டு இரண்டு பிரிவுகளாய் உள்ளன. இதில் ஏடிஸ் வகை கொசுக்கள் உப்பு நீரிலும் தடையில்லாமல் இனவிருத்தி செய்து மனிதன் மற்றும் மிருகங்கள் என்ற வேறுபாடின்றி நோய்களைப் பரப்பும் தன்மையுடையவை .   மற்றவை  அனோபிலிஸ் வகைகள், இவைகள்  நல்ல நீரில் தங்கள் இனங்களை விருத்தி செய்து, மனித இனத்தை மட்டும் தாக்கக்கூடியவைகள்.

எவ்வாறு தற்காத்துக்கொள்வது?       

  •     வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்த்தொட்டி, பூந்தொட்டி இவைகளை முறையாக பராமரிக்கலாம். 
  •     நீர் சேமிப்புக்கலங்களை மூடி வைத்தல் நலம். மாதமிருமுறை சேமிப்புக்கலங்களை சுத்தம் செய்யலாம்.  
  •     குறைந்த பட்சம் நம்மைச் சுற்றி நீர் தேங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  •     சாளரங்களுக்கு(windows) கொசுவலைகளைப் பொருத்தலாம். 
  •     நீண்ட நாட்களாய் நீர் தேங்கி இருக்கும் என்ற எண்ணமிருந்தால், கொசு அழிப்பான்களை தெளித்து விடலாம்.
        இனி என்ன நிம்மதியாய் கொசுக்களின் தொல்லையின்றி உறங்கலாம். . . வாழ்க வளமுடன்..... 

    Wednesday, August 4, 2010

    தாய்மைக்கு அழகு. . .!

               நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அதில் 17 லட்சம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். 22 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதை தொடும் முன்னர் இறக்கின்றனர். நாட்டில் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் 5 பச்சிளம் குழந்தைகள் இறப்பதாக புள்ளி விவரம் கூறுகின்றது. தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 22 குழந்தைகள்இறந்து போகின்றன. மேற்கூறிய அனைத்துக்கும் , குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைக்காததே காரணம்.

    சீம்பாலின் அவசியம் ?
               எல்லா குழந்தைகளுக்கும் பிறந்து அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் தாயின் சீம்பாலை அவசியம் கொடுக்க வேண்டும். தவறான வழிகாட்டுதலால், பெரும்பாலோனோர் அதைத் தவிர்த்து விடுகின்றனர். நோய் எதிப்பு சக்தியைப் பெற்றுக்கொள்ள இந்த சீம்பால் உதவும். குறைந்தது 6 மாதம் முடியும் வரையாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு வயது வரை அல்லது அதற்க்கு மேலும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

    தாய்ப்பாலின் நன்மை:
                தாய்ப்பால் ஊட்டுவதால் தாயுக்கும் சேயுக்குமான நெருக்கம் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து  கிடைக்கும். தாய்ப்பால் பெற்ற குழந்தைகள் அதிக அறிவுத்திறனுடனும், நல்ல உடல் வளர்ச்சியும் பெறுகின்றனர். சர்க்கரை நோய், காத்து சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல், குழந்தைப் பருவத்தில் வரும் புற்றுநோய், மூட்டு வாதம், கண் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் வரும் வாய்ப்பு மிக மிகக்  குறைவு.  

    தாய்க்கும் நன்மை:
             தாய்ப்பால் ஊட்டுவது, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.தாயின் விரிவடைந்த கருப்பை விரைவில் சுருங்கி பழைய நிலையை அடைய  உதவுகின்றது. தாய்மார்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் மனதளவில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

    எப்போதெல்லாம்?
              குழந்தை பிறந்தவுடன் சுறுசுறுப்பாக பால் குடிபதற்கு ஆவலாக இருக்கும். இந்நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது எளிது. பிறந்தவுடன் கொடுக்கவில்லை என்றால், சிறிது நேரத்தில் குழந்தை தூங்கிவிடும். அதன்பின் சிரமம் ஏற்படும். குழந்தைக்கு எப்போதெல்லாம் தேவைபடுகின்றதோ, அப்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.24 மணி நேரத்தில் குறைந்தது எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை நோய்வாய்ப் பட்டு இருந்தாலும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


    தாய்மார்களே! குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். அது உங்களையும் ஆரோக்கியமாய் வைக்கும். 



    நன்றி:

    தினமணி நாளிதழ் . . .