Friday, September 3, 2010

மறுபக்கம்...

                தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவம். 
          கோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி. 

              உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது  தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.  

                2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது   உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

                  தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்சிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம். 

                "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.  தருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு. 

              தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்?உணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா? சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள். 

                 எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா? எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா? வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா?

                    விடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன? நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்?

                   தனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித்  தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும்  கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்?

                  பொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...

"தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்"

               
                பாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.வெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது. 
 
         இப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத்தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. 
 
                இந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும்,  தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.
 
                  ஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது. இருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது "தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது. 
               
               கடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை. இப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்காரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
 
             முகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே  பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள். 
 
             இந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது. நிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது!

நன்றி:
தினமணி நாளிதழ். .