Tuesday, August 30, 2011

அந்திநேரத்தென்றல் கனவுகளாய். . !

சேலையூரில் உள்ள, ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தில் எமது நண்பர்களுடன் சென்று வந்த அனுபவங்கள், எமது பதிவாய் ..



          ஞாயிற்றுக்கிழமை மதியம், அனைவரும் இன்று 3.30 மணிக்கு சேலையூர் சந்திப்பில்(CAMP Road) சந்திக்கிறோம் என்று செய்தியோடு டேனியலிடம்  இருந்து குறுஞ்செய்தி வந்தது. எல்லாரும் கண்டிப்பாக 3.30 மணிக்கு அனைவரும் வந்துவிடுங்கள் என்று கூறியபோதே, 4 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் சரியாய் இருக்கும் என்று எண்ணி சற்றேக் கண்ணயர்ந்ததில் ஒரு அழகான கனவு.
          மழைமகன்(வர்ணன்) இடையிராது தனதன்பினை மண்மகள் மீது பொழிந்து கொண்டிருப்பதாலும், கதிரவனும் மேகம் என்னும் போர்வையினை போர்த்தி இருந்ததாலும், மாலை இதமானதாகவே இருந்தது.
அந்த அந்திநேரத் தென்றலில் திளைத்தவாறு ஒரு முப்பது பேர் கொண்ட குழு, சேலையூரில் இருந்த ரஜினிகாந்த் முதியோர் இல்லத்தை அடைந்து இருந்தனர்.
          அடடா என்ன அழகு, மழை மேகம் கண்ட மயில் போல, தனது தாயைக் கண்ட கன்றுக்குட்டியைப் போல பாட்டிமார்களது முகத்தினில் அத்துனை மகிழ்ச்சி. நாம்  வாழ்நாள் முழுதும் சம்பாதிக்கும் அனைத்துப் பொருட்களை கொணர்ந்து கொட்டினாலும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது. இன்னுமொரு தித்திக்கும் விடயம் என்னன்னா பத்து பேருக்கு மேல புதியதாய் Team Everest குழுவில் இணைந்தவர்கள். அனைவரும் பாட்டிமார்களுடன் விசாரிப்புகளில் கரைந்து கொண்டிருந்தோம்.  திடீரென்று ஒரு அபயக்குரல் அனைவரும் குரல் வந்த திசையில் திரும்பினோம்.
அட நம்ம ஒருங்கிணைப்பாளர் தம்பி. இந்த பையன் பார்க்க  சுமாராக இருந்தாலும், ஒரு பெரிய நிகழ்ச்சி நிரலுடன் வந்து இருந்தார்.
கதை சொல்லுதல்: எல்லாரும் "punch" பஞ்சுவோட  "பீர்"பால் கதை தான் என்றிருக்க, அவரின் சீடர் கதை சொல்ல வந்தார், யாரந்த சீடர் என்று யோசிக்க வேண்டியதில்லை, வேற யாரு நம்ம சரண்யா தான். குரு "பீர்"பால் கதைகளில் தேர்ந்தவர் என்றால், சீடர் மரியாதையை ராமன் கதைகளை ஒரு வார்த்தை கூட தவறாமல் சொல்லி விட்டார். சரண்யா சொன்ன கதையிலே மதி மயங்கி, கதை சொல்லுதல் முடித்துக் கொள்ளப்பட்டது. (மனசுக்குள்ள எல்லாருக்கும் மகிழ்ச்சி)
இசையும், பந்தும்: நண்பர் ஒருவர் புரட்சி தலைவரை தனது நடனத்தில் அறிமுகம் செய்யலானார். ஸ்ரீதர் இரண்டு நிமிடங்கள் தூய தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அப்புறம் ஒரு அக்கா, அடுப்பைப் பற்ற வைக்காமலே சாம்பார் வைத்து விட்டு சென்றார். பிளாரன்சு பாட்டி கோழி இறைச்சி சமைப்பதை விளக்கினார். எங்களில் இருந்த ஒரு பாடகி பாட்டுப் படிக்கலானார்.
வளிக்கூடு(ballon) நிரப்பி வெடிக்க வைத்தல்: அணிக்கு இருவராய் நால்வரும், ஊதிய பலூனை வெடிக்க வைப்பதில் பாட்டிமார்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். பாட்டிமார்களுக்காய் தம்ளரை அடுக்கும் போட்டியும்,யார் வீரர் என்று தீர்மானிக்க முறுக்கு தின்னும் போட்டியும் நடந்தது.  ஒவ்வொரு நிகழ்வும் பாட்டிமார்களின் உள்ளத்திலும், இளையவர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி மழையைப் பொழிந்தது.
          எங்கள் வாளி வித்துவான், தனது கணீர்க் குரலில் பாடல்களைப் பாடி எல்லோர் மனங்களையும் ஒரு சேர குவிர்த்து இருந்தார். அதுவரை அமைதியாய் இருந்த புலி ஒன்று திடீரென்று பாய்ந்து, நடனத்தில் அசத்தி சென்றார்.  இறுதியாய், பழங்களையும் சிற்றுண்டிகளையும் பகிர்ந்துக்கொண்டு கிளம்பும் போது, பாட்டிமார்களின் இதழ்கள் ஒரு சேர ஒலித்தது, அடுத்த வாரம் வர இயலாதா என்று?
பலரின் மனதில் இனம் புரியாத கவலையுடன் கிளம்பலானோம். கனவும் கலைந்தது
குறிப்பு:
இல்லத்திற்கு வந்து பாட்டியர்களுக்கும், சகதோழர்களுக்கும் மகிழ்வினை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு முன்பு இருந்தே குறுந்தகவலின் மூலம் நினைவூட்டிக் கொண்டு இருந்த நண்பர் டேனியல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் சென்னையில் இருக்கும் நண்பர்களும், சென்னையைப் பிறப்பிடமாய் கொண்ட அன்பர்களும் இயன்றால் இல்லம் வந்து செல்லுங்கள்.
=======================================================================
மாதம் ஒருமுறையேனும் பிறருக்கு உதவுவோம். 
(12/365)
=======================================================================






Thursday, August 11, 2011

மானுடம் தோற்குதம்மா?


நன்றி: தினமணி நாளிதழ்(11-08-2011)

மானுடம் தோற்குதம்மா என்ற தினமணியின் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு மீள்பதிவு செய்துள்ளேன்.

 சோமாலியாவில் சுமார் இருபது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கலவரங்களில் மனிதர்கள் இறப்பது மனதை வேதனைப்படுத்தாத அளவுக்கு மிகச் சாதாரண நிகழ்வாக, அது அவர்கள் தலையெழுத்து என்பதாக மாறிவிட்டாலும், கடந்த 90 நாள்களில் ஐந்து வயதுக்குள்பட்ட 29,000 குழந்தைகள் இறந்துவிட்டனர் என்பதை அப்படி சாதாரணமாகக் கருத இயலவில்லை. இந்தக் குழந்தைகள் நோயால் இறக்கவில்லை என்பதும், உணவுப் பஞ்சம்தான் இவர்களது சாவுக்குக் காரணம் என்பதும் வேதனையிலும் வேதனை.

 தகவல் தொழில்நுட்பத்தாலும், வானூர்திகளாலும் உலகம் சுருங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, பால்பவுடர் போன்றவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது சில மணி நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய செயல்தான். உணவுக்கு ஏற்பாடு செய்ய ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருந்தாலும் இந்த உணவைக் கொண்டு சேர்க்கவிடாமல் தடுக்கிறார்கள் சோமாலிய அரசுக்கு எதிராகப் போரிடும் அல் -ஷபாப் தீவிரவாதிகள். சரி, உணவு தர முடியவில்லை. இவர்களுக்குப் பணமாக உதவலாம் என்று ஐ.நா. திட்டமிட்டால், அந்தப் பணத்தைத் தீவிரவாதிகள் பறித்து, ஆயுதம் வாங்கப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை காரணமாக அந்த எண்ணத்தை நிறைவேற்ற முடியவில்லை. யாரோ தரும் உணவைத்தான் தடுக்கிறார்கள், நாமாவது வெளியேறிவிடுவோம் என்றால் அதையும் தடுக்கிறார்கள் அவர்கள். உணவு கிடைக்க வழிஇருந்தும், தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள இந்த மரணத்தை - பட்டினிச் சாவுகள் என்பதைக் காட்டிலும், ஈவுஇரக்கமற்ற கொலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 அல் - ஷபாப் அமைப்பு அல் -காய்தா தீவிரவாத அமைப்புடன் இணைவு பெற்ற அமைப்பு என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் எழுதுகின்றன. இப்படி, ஏதோ பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரியைப் போல, இந்தத் தீவிரவாத அமைப்பை விவரிப்பதேகூட அந்த அமைப்பை மகிமைப்படுத்துவதைப் போல அல்லவா இருக்கிறது. இந்த அமைப்பின் முறையற்ற அதிகாரத்துக்குள் சோமாலியாவின் பாதிப் பகுதி அஞ்சிக் கிடக்கிறது. அரசாங்கம் இங்கே செயல்படமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செயல்பட முடியவில்லை. மிகச் சில அமைப்புகள் மட்டுமே தைரியமாக இப்பகுதிகளுக்குச் சென்று நிலவரங்களை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

 கடந்த மூன்று ஆண்டுகளாகவே சோமாலியாவின் தென்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் எல்லாவற்றையும் இழந்து, வாழும் வழியின்றித் தவிக்கும் ஏழைகள் தலைநகருக்கு இடம்பெயரத் தொடங்கிவிட்டனர். இங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வருகிற மக்கள் முகாமுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். உணவு, உடை, தண்ணீர் எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு.

 இந்த ஏழைகளுக்குத் தரும் ரேஷன் உணவு தானியங்களையும் தூக்கிச் செல்ல முயல்கிறது சோமாலியா ராணுவம். அண்மையில், ஒரு முகாமுக்கு வழங்கப்பட்ட 290 டன் ரேஷன் தானியங்களை ராணுவத்தினர் தள்ளிக்கொண்டுபோக முயற்சித்தபோது, அதைப் பட்டினியாக உள்ள மக்கள் எதிர்த்ததால், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது ராணுவம். தடுத்த மக்களில் 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராணுவ வீரர்கள் போய்விட்டனர். கேள்விக்கொருவர் இல்லை.

 1992-ல் இதே போன்ற வறட்சி, பட்டினிச் சாவு, உள்நாட்டுக் கலவரம் என்று சோமாலியா தவித்த நேரத்தில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஐ.நா. படைகளை அனுப்பி நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இன்று அமெரிக்காவுக்கு வேறு கவலைகள் வந்தாகிவிட்டது. சோமாலியா பற்றிக் கவலைப்பட அமெரிக்காவுக்கு நேரமில்லை. ஐக்கிய நாடுகள் சபை தன் கடமைக்கு மற்ற நாடுகளை அழைத்தாலும் உதவி செய்வார் யாருமில்லை. அண்டை நாடுகளான நைஜீரியாகூட கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்கிறது என்றால், இந்த நாட்டைப் பற்றிய அவர்கள் மதிப்பீடு என்ன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

 இந்தப் பஞ்சம் இன்று திடீரென ஏற்பட்டுவிடவில்லை. கடந்த 2009 முதலாகவே வறட்சி காணப்பட்டு வருகிறது. அரசும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவான உணவு மற்றும் வேளாண் அமைப்பும் தொடர்ந்து எச்சரிக்கவே செய்தன. ஆனால், ஏழை விவசாயிக்குத் தன் நிலத்தை விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை. மழைவரும் என்ற நம்பிக்கையில் பயிர் செய்து காத்துக் கிடந்து, ஏமாறுவது மூன்று ஆண்டுகளாகத் தொடர்கிறது.

 ரமலான் மாதத்தில் இப்படி ஏழைகளை வெளியேறவிடாமல் தடுப்பது சரியல்ல என்று பலரும் விமர்சிக்கப்போய், அல் -ஷபாப் தீவிரவாதிகள் கொஞ்சம் மனமிரங்கி, உணவை வந்து வழங்கலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால், இப்போது வருவதற்கு யாரும் தயாராக இல்லை. பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின்றாரே- இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே..

 கடந்த மூன்று நாள்களாக, இங்கிலாந்தில் சில கட்டடங்களைத் தீக்கிரை செய்து, பொருள்களைக் கொள்ளையிடும் சம்பவங்கள் பெரும் பிரச்னையாக (?) மாறிவிட்டதால் சோமாலியா பற்றிய செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வேறு செய்திகளே இல்லாதபோது, மீண்டும் இவர்களது பட்டினிச் சாவுகள் பேசப்படலாம்.

 "மனித உயிர் என்ன வெல்லமா?' என்று கேட்கக்கூட நாதியில்லாத நிலையில், நாம் நாகரிகம், விஞ்ஞானம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை, மக்களாட்சி என்று பேசுகிறோமே, உலகில் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் போய்விட்டதா? நாம் போடுவதெல்லாம் வெறும் வேஷம்தானோ?

 பயமாக இருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நமது சந்ததியர் "சோமாலியா' சந்திக்கும் கொடுமையை அனுபவிக்க வேண்டிவருமோ என்னவோ, யார் கண்டது?