Friday, December 17, 2010

சேவை மனப்பான்மை

நன்றி கொல்லிமலைச்சாரல் ஆனந்த் (http://ceoblog.kapsystem.com)

“ஏழை மக்களுக்குச் செய்கின்ற சேவை, கடவுளுக்கு நேராக சென்று சேர்ந்துவிடும். கடவுளைத் தரிசிக்க நாள்கணக்கில் வரிசையில் நின்று உண்டியலில் போடப்படுகிற பணம் மக்களாகிய கடவுளிடம் வராது”.
‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பது சேவை பற்றி நம் முன்னோர்கள் கூறியது. ஆனால் இப்பொழுது இந்த வாசகம் அரசியல் தலைவர்கள் நகைச்சுயைாகப் பயன்படுத்துகிற வாசகம். கடவுள் சிலைக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு தரவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் யாத்திரைக்குப் போகும் வழியில் அநேக குழந்தைகள் உடைகள் இன்றி இருந்ததைப் பார்த்து யாத்திரையையே நிறுத்தினார். சீடர்களிடம் அவர்களுக்கு உடைகள் வாங்க உடனடியாக ஏற்பாடு செய்யக் கேட்டார். ‘நம்மிடம் இருக்கும் பணத்தில் உடைகள் வாங்கிவிட்டால், யாத்திரை போக முடியாது. பகவானைத் தரிசிக்க முடியாது’ என்று சீடர்கள் சொல்ல, ‘பகவானை இந்தக் குழந்தைகளிடமிருந்து இல்லாமல் கோயில்களிலா தரிசிக்க முடியும்?’ என்று கேட்டார். அந்த பக்குவம்தான் சேவை.
காந்திக்கு ஏற்பட்ட சோதனை – பீதிகர்வா என்ற கிராமத்திற்கு சென்று இருந்தபோது, அங்கு இருந்த சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டார். அப்பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி மனைவியிடம் கூறினார். கஸ்துரிபா அவர்களும் சென்று அவர்களோடு பேசினார்கள். அதில் ஒரு பெண், தன் குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள். “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் ஒரு புடவைதான்; இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் சொல்லி எனக்கு இன்னொரு புடவை வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்”.
நண்பர்களே, இது போன்ற நிலைமைகள் அறையாடை மனிதர் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கித் தருவதற்கு முன்பு மட்டுமல்ல. இன்றும் நமது கிரமாப்புறங்களில் பல்வேறு குழந்தைகள் இந்த நிலைமையிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள்.
நாம் மேலே பார்த்த காந்தியோ, இராமகிருஷ்ண பரமஹம்சரோ பணத்தை வைத்துக் கொண்டு சேவைக்குச் செல்லவில்லை. தன் மனத்தினால் சேவை செய்தார்கள். 
“வாருங்கள் நண்பர்களே, நாம் ஒவ்வொருவரும், சுதந்திர இந்தியாவை கல்வியறிவுள்ள இந்தியாவாகவும் எழுச்சிபெற்ற இந்தியாவாகவும் மாற்றுவோம்.”
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.