Monday, September 5, 2011

ஆசிரியர் தினம் - பதிவாய் ஒரு பகிர்தல்



முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5  அன்று, அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்
தினம் கொண்டாடப்படும். மாணவர்கள் தங்கள் அன்பின்
அடையாளமாக வகுப்பு ஆசிரியர்களுக்கு மலர்க்கொத்து கொடுப்பதும், இனிப்பு வழங்குவதும், சில இடங்களில் பாராட்டு விழாக்களுமாக நடைபெறும் இந்த வேளையில், இன்றைய நவீன காலகட்டத்தில் ஓர் ஆசிரியர் என்பவரை எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

திருவாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும், அறிவியலறிஞர் மற்றும் முன்னாள்  குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அவர்களும், பல்வேறு பொறுப்புகளை வகித்த போதும், அவர்கள்  விரும்பியது ஆசிரியப்பணியைத் தான். ஆசிரியப்பணியைப் பெரிதும் போற்றக் காரணம் என்னவாய் இருக்க கூடும் என்று பள்ளி நாட்களில் நான் வியக்காத நாட்களே இல்லை. மனிதனின் வாழ்வுதன்னில்
ஆசிரியர்(குரு) என்பவர் இல்லாமல் இருக்க வாய்ப்புகளே இல்லை,
ஒரு வேளை  எவராவது குரு இல்லாமல் இருப்பாரெனில்,  அவர் ஐந்தறிவுள்ள உயிரினங்களுடனும் ஒப்பிட இயலாதவர்.

எனது பத்தொன்பது வருட  பள்ளி, கல்லூரி நாட்களில், நான் சந்தித்த, எனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை அறுபதைத்
தாண்டும்.  ஆனாலும் என் மனதில் இன்றளவும் நிலைத்து நின்று, தமது எண்ணங்களால் எம்மை  ஆட்கொள்பவர்கள் ஒரு சிலரே. ஒரு மாணவன்  பள்ளியை விடுத்துச் சென்று பல ஆண்டுகள் கடந்த பின்னும் தமது ஆசிரியரை நினைவு கூர்வதும், தமது சந்ததியினருக்கும் தமக்கு கிடைத்தது போல ஆசிரியர் கிடைக்க மாட்டாரா? என்று எண்ணத் தூண்டுபவரே உண்மையில் நல்லாசிரியராய் இருக்க முடியும். இத்தகைய ஆசிரியர் எவரும் விருதுகளுக்காகவும், புகழுக்காகவும் பணியாற்றுவதும் இல்லை, அவைகளை எதிர்பார்ப்பதும் இல்லை.

பொதுவாகவே ஆசிரியர்களை மூன்று வகையினராய்ப் பிரிக்கலாம்.  பாடப் புத்தகங்களில் உள்ளனவற்றை தெளிவாய்ப் புரியவைத்து, நல்ல மதிப்பெண் பெற வைக்க முனைவோர் ஒரு வகையினர், இவர்கள் அறிவைப் புகட்டுபவர்கள். உண்மையில் மாணவனுக்கு பாடத்தில் ஆர்வம் இல்லையென்றபோதும், அவர்களுக்கு விருப்பத்தை உண்டாக்குபவர்கள் மற்றொரு வகையினர், இவர்கள் அறிவைத் திணிப்பவர்கள். இவை தவிர்த்து மாணவனை சிந்திக்கத் தூண்டி, அவனுக்கு என்ன தேவை என்பதனை மாணவனே முடிவெடுக்கும்
படித் தூண்டுபவர் மற்றொரு வகையினர் இவர்கள் அறிவைத் துலக்குபவர்கள். புகட்டிய அறிவும், திணித்த அறிவும் சிறிது காலத்தில் கரைந்து விடுகின்றது, ஆனால் துலக்கிய அறிவானது மென்மேலும் பொலிவுற்று மாணவரைத் தரம் உயர்த்துகிறது.

தகவல்  தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் மக்கள் மதிமயங்கி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், விரக்தியுடன் ஆசிரியப் பணியைத்  தொடங்கியவர் சிலர் இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தயவு கூர்ந்து நினைவில் கொள்ளுங்கள், தங்களால் பலநூறு பொறியாளர்களையும் , சிலநூறு மருத்துவர்களையும், தங்களது சேவையினால் உருவாக்க இயலும். அதனால் பொறியாளர், மருத்துவர், மற்றவரை விடத் தாங்களே உயர்ந்தவர்கள். நான் ஆசிரியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளுங்கள், தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணிக்கும் பெருமை சேருங்கள்.

நாங்கள்(சமூகம்) ஆசிரியர்களிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், தங்களது மாணவரை ஒரு  மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆட்சியராகவோ மாற்றும் முன்னர் அவருள் உறங்கும் மனிதத்தை எழுப்புங்கள், அவற்றைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கச் செய்யுங்கள். சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலையில், ஆசிரியராகிய தங்களால் மட்டுமே செய்ய இயலும்.

 ஆசிரியர் தினம் என்றதும் என்னுள் எழுந்த வெண்பா:


திக்கற்றவர்களைத் திக்குமுக்காடச் செய்து திகட்டாத
திளைப்பில் ஆழ்த்துபவரே ஆசிரியர். 


ஆசிரியர்  அனைவருக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் காணிக்கையாக்குகின்றேன்.